முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே தலைவர்கள் சிலை உடைப்பு - மறியல்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரம்குன்றம்,ஆக.8 - மதுரை அருகே டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதால் சாலை மறியலில் பலர் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடியில் உள்ள அம்பேத்கர், சின்ன உடைப்பில் உள்ள அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது சிலைகளின் தலைகள் நேற்றுமுன்தினம் அதிகாலை உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் மதுரை மாவட்ட போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் மயில்வாகன், கண்ணன், டி.எஸ்.பி.க்கள் ராஜன், புருசோஷத்தமன் உள்பட போலீசார் அதிகாலை 3.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர். தகவலறிந்த அப்பகுதியினர் அதிகாலை 5 மணிக்கு சாலையில் அமர்ந்தனர். இதனால் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்துதுறைக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. தென்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டன. அவனியாபுரம், பெருங்குடி, விமான நிலையம், காரியாபட்டி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்றுக்காலை சரியாக 9 மணிக்கு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சின்ன உடைப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார். உடைக்கப்பட்ட சிலைகள், சீரமைக்கப்பட வேண்டும். உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வெண்கல சிலைகள் 15 நாட்களுக்குள் நிறுவப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். சிலைகள் உடனடியாக சீரமைக்கப்படும். உடைத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெண்கல சிலை அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலை மறியலை கைவிட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டுக்கொண்டார். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு உடன்படவில்லை. அதனைத்தொடர்ந்து பெருங்குடிக்கு வந்த கலெக்டர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். அவர்களும் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஒரு குழு அமைப்போம். அரசிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்போம் என கலெக்டர் மேலும் தெரிவித்தார். அவர்கள் உடன்படவில்லை நேற்று சரியாக பகல் 12 மணிக்கு பெருங்குடியில் சாலையில் அமர்ந்திருந்தோர் ஓரத்திற்கு சென்றனர். ஒரு பிரிவினர் ரோட்டில் சமைப்பதற்கு பாத்திரங்களை கொண்டுவந்தனர். போலீசார் சமாதானம் செய்தபின், ரோட்டின் ஓரத்தில் சமையல் செய்தனர். இதனால் நேற்று முழுவதும் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களை கைது செய்வோம். சிலைகள் சீரமைக்கப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவகையில் அனைத்து சிலைகளுக்கும் இரும்பு கிரில் பாதுகாப்புக்காக போடப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்