ஒலிம்பிக் குத்துச்சண்டை: மேரிகோமுக்கு வெண்கலம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன் , ஆக. 9 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியின் அரை இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மேரிகோம் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டைப் பிரிவில் இந்திய அணி சார்பில் 6 வீரர்களும், ஒரே ஒரு வீராங்கனையான மேரிகோமும் பங்கேற்றனர். இதில் மேரிகோம் முந்தைய சுற்றுக்களி ல் சிறப்பாக சண்டையிட்டு அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் 

வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு பதக்க வாய்ப்பு உறுதியானது. 

இந்நிலையில் மகளிர் குத்துச் சண்டைப் போட்டியின் 51 கிலோ எடைப் பிரிவிற்கான அரை இறுதிச் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று மாலை நடந்தது. இதில் இந்திய வீராங்கனை மேரிகோமும், இங்கிலாந்து வீராங்கனை நிக்கோலா ஆடம்சும் மோதினர். இந்த சுற்றில் இங்கிலாந்து வீராங்கனை சிறப்பாக சண்டையிட்டார். 

இறுதியில் அவர் 11- 6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்திய வீராங்கனை மேரிகோம் போராடி தோல்வி அடைந்தார். மேரிகோம் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையாவார். எனவே அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அரை இறுதியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

மேரிகோம் அரை இறுதியில் தோல்வி அடைந்த போதிலும், அரை இறுதிவரை அவர் சிறப்பாக சண்டையிட்டார். அவரது குத்துக்களில் தொழில் நுணுக்க த்தையும், அனுபவத்தையும் காண முடிந்தது. 

லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச் சண்டை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 2 குழுந்தைகளின் தாயான மேரிகோம் பங்கேற்று வெண்கலம் வென்றது பாராட்டத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: