முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 19 - பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவர் சிரமப்பட்டார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அயனாவரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என வித்தியாசமான பாணியில் எழுதியவர் ரா.கி.ர. இவர் 1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு ​ என்ற பெயரில் கேள்வி- பதில் எழுதியவர்களில் `ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன். அவருடன் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர் இதில் பங்கேற்றனர். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் இவை எல்லாம் ரா.கி.ரங்கராஜனின் புனைபெயர்கள். ரங்கராஜன் 1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் ஆர்.வி.கிருஷ்ணமாசாரி ஒரு சமஸ்கிருதப் பண்டிதர். ரங்கராஜனின் பத்திரிகை அனுபவம் சக்தியில் துவங்கி, காலச்சக்கரம், கல்கண்டு என தொடர்ந்தது. இவருடைய வரலாற்றுப் புதினமான `நான் கிருஷ்ண தேவராயன்' புகழ் பெற்ற ஒன்று. கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்திற்கு ரா.கி.ரங்கராஜன் வசனமும் எழுதியுள்ளார். பின்னாளில் விகடன் இதழ்களிலும் எழுதினார். அவரது படைப்புகளில் சில விகடன் பிரசுரத்தில் இருந்து புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. சில காலம் வரை அண்ணாநகர் டைம்ஸ் என்ற உள்ளூர் இதழில் நாட்டு நடப்புகளை எழுதி வந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்