முழுக் கவனத்துடன் விளையாடுவேன்: சச்சின்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், ஆக. 22 - நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முழு கவனத்துடன் விளையாடுவேன் என்று நட்சத்திர வீரர் டெண்டுல்கர் கூறியுள்ளார். நியுசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு சச்சின் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார். இந்தியாவில் போட்டி நடைபெறுவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் சச்சின் கூறியிருப்பதாவது, 

நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது விளையாடவிருக்கிறேன். கடந்த சில மாதங்களாக என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டேன். பல ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதால் குடும்பத்தோடு இருப்பது முடியாத ஒன்றாக இருந்தது. அந்தக் குறை இப்போது தீர்ந்து விட்டது. எனினும் கிரிக்கெட் விளையாட உடல் தகுதி மிக முக்கியம் என்பதால் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தேன். ஓய்வு பெறுவதை தற்போது நான் சிந்திக்கவில்லை. இந்திய அணி அடுத்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது. அதிலும் எப்போதும் போல் பங்கேற்பேன். டெஸ்ட் போட்டியின் போது அதிக நேரம் களத்தில் இருக்க வேண்டியதுள்ளது. எனவே இதற்கான சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனவே நியுசிலாந்துக்கு எதிராக முழு திறமையுடனும், முழு கவனத்துடனும் விளையாடுவேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: