முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே குண்டுவீச்சு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா,மார்ச்.5 - வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். 

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு முதன் முதலாக வெளிநாட்டு பயணமாக வங்கதேசத்திற்கு நேற்று சென்றுள்ளார். 3 நாள் பயணமாக சென்றுள்ள பிரணாப், டாக்கா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகம் சார்பாக பிராணப் முகர்ஜிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பட்டத்தை வங்கதேச அதிபர் வழங்கினார். இந்தநிகழ்ச்சிக்கு பிறகு அவர் தங்கியிருந்த சோனார்கான் பான்-பசிபிக் ஓட்டலில் தங்கி உள்ளார். அந்த ஓட்டலுக்கு வெளியே நேற்று திடீரென்று நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஓட்டல் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது வீசி விட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர்.  ஓட்டலுக்கு வெளியே சுமார் 150 அடி தூரத்தில் தெரு வளைவில் நின்று கொண்டு குண்டை வீசிவிட்டு வேகமாக ஓடிவிட்டனர். இதுவரை இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. குண்டுவீசப்பட்டபோது ஓட்டலில் பிரணாப் இருந்தாரா? அல்லது இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவத்தையொட்டி ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பத்திரிகை செய்தி தொடர்பாளர் வேணு ராஜமோனி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓட்டலுக்கு அருகே பெட்ரோல் குண்டு வெடித்த சிதறல்கள் கிடந்ததை வங்கதேச அதிகாரிகள் எடுத்தனர். இந்த குண்டு சத்தம் இல்லாமல் வெடித்தது. வெடித்த சத்தம் குறைவாக இருந்ததால் ஜனாதிபதியுடன் வந்த குழுவினர்கள் யாருக்கும் கேட்கவில்லை. வங்கதேசத்தில் பந்த் போராட்டம் நடக்கும்போது இந்த மாதிரி குண்டுகள் வெடிப்பது வழக்கமாக நடந்து வரும் சம்பவமாகும். இதை குண்டு என்று கூட கூறமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவிலும் பிரணாப் தங்கியிருக்கும் ஓட்டல் அருகேயும் மாமூல்நிலைமை நிலவுகிறது. வங்கதேச போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து அந்த நாட்டை சேர்ந்த மதவாத இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 48 மணி நேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து நேற்றுமுதல் பந்த் போராட்டம் நடந்து வருகிறது. டாக்கா சென்றுள்ள பிரணாப் முகர்ஜி நேற்றுமாலையில் அந்த நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்