முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு: வைகோ கண்டனம்

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 30 - பெட்ரோல் விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் -வைகோ ஆகியோர் கண்டனம் கூறியுள்ளாதாவது 

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஜூன் முதல் தேதியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டது. கடந்த 16-ம் தேதி மீண்டும் ரூ.2.54 உயர்த்தப்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ.2.32 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல் விலையை உயர்த்துவதென்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும்.

ஜூன் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5.85 , அதாவது சுமார் 10 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் டீசல் விலையையும் கடுமையாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலைகளை மாதம் இரண்டு முறை அல்லது மூன்று முறை உயர்த்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக அவதிப்பட்டு வருவதால், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மத்திய அரசினுடைய தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ரூபாயின் மதிப்பும் குறைந்து மிகக் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பண்டங்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களும், மாத ஊதியம் வாங்குவோரும், அடித்தட்டு மக்களும், தினக்கூலி வாழ்வு நடத்தும் ஏழைகளும் இந்த விலைவாசி உயர்வால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 பெட்ரோலின் விலை ஜுன் 1-ந்தேதி லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டது. ஜுன் 15-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஜுன் 28-ந்தேதி மூன்றாவது முறையாக லிட்டருக்கு ரூ.1.82 காசு உயர்த்தப்பட்டுள்ளது. 

இதில் விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டுவரியைச் சேர்க்கும்போது விலை இன்னும் அதிகமாகும். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.71-க்கு விற்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கான ரூபாய் மதிப்பு குறைந்தது தான் காரணம் என்பதை ஏற்க முடியாது. 

 அந்த மதிப்பு கூடுவதும் குறைவதும் சராசரியாக நடக்கக் கூடியது தான். எண்ணெய் நிறுவனங்கள் கோடி கோடியாக கொள்ளை லாபம் சம்பாதிக்க மத்திய அரசு அனுமதித்து விட்டு பொதுமக்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்துகிறேன். 

 இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்