முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,மே.11 - தமிழக சட்டசபை தேர்தலில் 176 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க. மட்டும் 133 இடங்களை கைப்பற்றும் என்றும் தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளே கிடைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. 

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், அ.இ.மூ.மு.க., குடியரசு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, சரத்குமார் கட்சி போன்ற கட்சிகள் ஒரு அணியாக போட்டியிட்டன. தி.மு.க., காங்கிரஸ், திருமாவளவன் கட்சி, பா.ம.க. போன்றவை ஒரு அணியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், 5 ஆண்டு காலம் இடைவிடாது நீடித்த மின்சார வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, சிமிண்ட், செங்கல் விலை உயர்வு, சட்டம்,ஒழுங்கு சீர்குலைவு போன்ற பல பிரச்சினைகளால் தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டு காலம் சொல்லொணா வேதனையில் சிக்கி தவித்தனர். அது மட்டுமின்றி, அன்றாடம் நடந்த வழிப்பறி, கொலை, கொள்ளைகள் போன்றவற்றாலும் மக்கள் வெறுத்துப் போயிருந்தனர். ரேசன் அரிசி கடத்தல், மணல் கடத்தல் போன்றவற்றாலும் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். 

இந்த அதிருப்தி தேர்தலின் போது எதிரொலித்தது. தேர்தலுக்கு முன்பே பல கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே அமைந்தன. கோவையை சேர்ந்த ஒரு அமைப்பு மற்றும் பல வார இதழ்கள், தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்பை வெளியிட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதை உறுதி செய்தன. இந்த முறை தேர்தல் ஆணையமும் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாகன சோதனை நடத்தி பல கோடி ரூபாய்களை கைப்பற்றியது. இதனால் திட்டமிட்டபடி தி.மு.க.வினர் மக்களுக்கு பணத்தை அதிகளவில் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் கூட மின்வெட்டை பயன்படுத்தி அவ்வப்போது மக்களுக்கு பணம் கொடுத்தனர். ஆனாலும் மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. 

இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக சட்டசபை தேர்தலில் 176 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மட்டுமே 133 இடங்களை கைப்பற்றும் என்று நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. மேலும் தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் நியூஸ் எக்ஸ் கூறியுள்ளது. 

இதே போல் ரீடிப் என்ற இணையதளம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி அ.தி.மு.க. கூட்டணிக்கு 188 இடங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு மட்டும் 133 இடங்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளே கிடைக்கும் என்றும் இந்த இணையதளம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சியும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை விட மக்கள் மத்தியில் 5 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மேற்கண்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் வரும் 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்