முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் மனதளவில் தயார் செய்ய நீதிக்கதைகள்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, செப். 21 - அங்கன் வாடி மையங்களில் குழந்தைகள் முன்பருவக்கல்வி போதனைக்கு எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரைஅட்டைகளில்பொருத்தி, நீதிக்கதைகள் போதிப்பதற்கு  -முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவர். சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை எந்தவித இடர்பாடும் இன்றி பெற்று, மகிழ்ச்சி நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகளே வளமான மற்றும்  வலிமையான தலை முறையினராக உருவாகின்றனர். மக்கள் நல்வாழ்வில் ஊட்டச்சத்தும், சுகாதாரமும் பெரும் பங்கு வகிக்கின்றன. தாய் சேய் நலத்திற்கு வழிகாட்டும் திட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், தமிழகத்தில் 434 திட்டப் பகுதிகளில் 4,940 குறுமையங்கள் உள்பட 54,439 குழந்தைகள் மையங்களில் (அங்கன் வாடிமையங்கள்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக, முன்பருவக்கல்வி போதனை நல்லதரமுள்ள வகையில் அளிக்கப்பட வேண்டும்.  இதனைக் கருத்தில் கொண்டு பலவண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில் பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன் பருவகல்வியை போதிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இப்பணி முதற்கட்டமாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் பொயில் செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர். 

தமிழகத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் வளர் இளம் பெண்கள் ஆகியோர் இடையே காணப்படும்  ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்டறிந்து, அதனை அகற்றி, ஊட்டச்சத்து குறைபாடற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அங்கன் வாடிமையங்கள்  மூலம் 6 முதல் 60 மாதம் வரை வயதுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு, எடை/வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன.   மகப்பேறு காலத்தில் கருவளர்ச்சியை மதிப்பீடு  செய்யும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களின் உடல் எடை அதிகரிப்பை கண்காணிப்பது மிகவும் அவசியம். மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம்தோறும் எடை எடுத்தபின் தாய் சேய்நல அட்டை/வளர்ச்சி கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.  இதன் மூலம் ஊட்டச் சத்துகுறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர்இளம்  பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடைபார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடைபார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடைபார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதற்காக 7  கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்