முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.3 - அரிசி கடத்தலை தடுக்கவும், கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார். உணவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பல்வேறு இடங்களுக்கு சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறார் . முதல்வர் ஜெயலலிதா உத்திரவுப்படி நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்திற்கு வந்தார். அங்கே நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உணவு துறை செயலாளர் ஜெயக்கொடி, சிவில் சப்ளையர் ஆணையர் பாலசந்திரன், நிர்வாக இயக்குனர் வீரசண்முகமோனி, உணவு கடத்தல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட விநியோக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுரை கூட்டத்தில் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

பொது விநியோக திட்டம் ஏழை எளிய மக்களுக்கு உரிய திட்டம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசின் முதல் திட்டமாக 1.6.2011 முதல் இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கியது அவர் ஏழை எளிய மக்களிடம் எத்தகைய மட்டற்ற அன்பை கொண்டுள்ளார் என்பதை உங்களுக்கு விளக்கும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இவ்வாறு ஏழைகளுக்கு வழங்கும் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள் அனைத்தும் எந்தவித கடத்தலும் இல்லாமல் ஏழைகளுக்கே சென்றடையவேண்டும் என்பதை குறிப்பிட்டு தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள். நமது அனைவரின் கடமையும் முதலமைச்சர் அறிவுரைகளை கடைபிடிப்பதுடன் அவர் விரும்பியவாறு பொது விநியோக திட்ட பலன்கள் ஏழைகளை சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். எனவே, இன்று முதல் உங்களது பொது விநியோக திட்ட கண்காணிப்பினை மேம்படுத்தி பதுக்கல் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். கிடங்குகள், நியாயவிலை அங்காடிகள் தீவிர தணிக்கை, தீவிர கண்காணிப்பு, இரவு ரோந்து ஆகிய பணிகளை செவ்வனே மேற்கொண்டு பதுக்கல் கடத்தலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து உரிய சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

மொத்த வணிகர்கள் எண்ணெய் டெர்மினல்களில் எடுக்கும் மண்ணெண்ணெய் லாரிகளை வணிகத் தலத்திற்கு கொண்டு வராமல் கள்ளச் சந்தைக்கு கடத்துகிறார்கள் இது தடுக்கப்பட வேண்டும். மொத்த வணிகர்கள் நியாய விலை அங்காடிகளுக்கு மண்ணெண்ணெயை அனுப்பியது போல பதிவுகள் செய்து நியாய விலை அங்காடி பணியாளர் ஒத்துழைப்புடன் மண்ணெண்ணெயை கள்ளச் சந்தைக்கு கடத்துகிறார்கள் இது தடுக்கப்பட்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மொத்த வணிகர்கள் நியாய விலை அங்காடிகளுக்கு அனுப்பும் மண்ணெண்ணெயை அளவு குறைவாக அனுப்பி அதன் மூலமாக கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயை கள்ளச் சந்தைக்கு அனுப்புகிறார்கள் இது உறுதியாக தடுக்கப்பட வேண்டும்.

குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்காமலேயே மண்ணெண்ணெய் வழங்கியது போல, போலி  பட்டியல் மற்றும் போலி பதிவுகள் செய்து மண்ணெண்ணெயை கள்ளச் சந்தையில் விற்கிறார்கள் இந்த முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு அளவு குறைவாக மண்ணெண்ணெயை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் மண்ணெண்ணெயை அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்கிறார்கள் இது தடுக்கப்படவேண்டும். மொத்த வணிகருடன் ஒன்று சேர்ந்து மண்ணெண்ணெயை சில்லரை வணிகத் தலத்திற்கு கொண்டு வராமலேயே கொண்டு வந்தது போல பதிவுகள் மற்றும் போலிப் பட்டியலிட்டு மண்ணெண்ணெயை கள்ளச்சந்தையில் விற்கிறார்கள் இத்தகைய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிடங்குகளிலிருந்து அனுப்பும் மூட்டைகளில் அளவு குறைவாக அரிசியை அனுப்பி அதன் மூலம் சேகரிக்கப்படும் கிடங்குகளிலிருந்து அரிசியினை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நியாய விலை அங்காடிகளுக்கு அனுப்பாமேலயே மூட்டைகளை அனுப்பியது போல பதிவுகள் செய்து அங்காடி விற்பனையாளரின் ஒத்துழைப்போடு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கிடங்குகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு இத்தகைய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படவேண்டும்.

கிடங்குகளில் இருப்பு குறைவு இல்லாதபோதும், இருப்பு குறைவது போல கையாளூதல் இழப்பைக் கழித்து, அதன் மூலம் சேகரிக்கப்படும் அரிசியினை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய முறைகேடுகள் களையப்படவேண்டும். அரவை முகவர்கள் கிடங்கு அலுவலர்கள் கூட்டு சேர்ந்து, அரவைக்கு கொடுக்கப்பட்ட நெல்லிருந்து அரவை செய்து அரிசியைப் பெறாமல் பொது விநியோகத் திட்ட பழைய அரிசியையே அரவை செய்த அரிசி போல் கிடங்குகளில் ஒப்படைக்கின்றனர். இத்தகைய முறைகேடுகள் முற்றிலுமாக களையப்படவேண்டும்.

அரவை முகவர்களிடமிருந்து அரிசியைப் பெறாமலேயே அரிசியைப் பெற்றது போல பதிவுகள் செய்து அங்காடிக்கு அனுப்பியது போல பதிவுகள் மேற்கொண்டு அங்காடியிலும் போலி பட்டியலிட்டு அரிசியை கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இத்தகைய செயல்களை மேலோட்டமாக கண்டுபிடிக்க இயலாது, இரகசிய தகவல்கள் சேகரித்து கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளை ரகசியமாக கண்காணிப்பதுடன் அரிசி இயக்கத்தையும் ரகசியமாக கண்காணித்து முறைகேடுகளை கண்டுபிடித்து களையவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்