முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

சனிக்கிழமை, 18 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம்,ஜூன்.18 - இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டு மண்டபம் கடற்கரைக்கு வந்தடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 1 ம் தேதி ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ஜெயகுமார், பிரதாப், சுரேஷ், மாரி ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அப்போது சூறாவளி காற்று வீசியதால் நடுக்கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இந்த சூறாவளி காற்றில் சிக்கிய படகின் பலகை உடைந்து கடலுக்குள் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்களும் மிதக்கும் கேன் உதவியுடன் 8 மணி நேரம் நீந்தி இலங்கையில் உள்ள நைனா தீவில் தஞ்சமடைந்தனர். 

பின்னர் மீனவர்களை அங்கிருந்து இலங்கை கடற்படையினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து யாழ்ப்பாணம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு தந்தி அனுப்பினார். அதன்படி மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. அதன் விளைவாக 4 மீனவர்களை விடுதலை செய்வது குறித்த வழக்கு கடந்த 16 ம் தேதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் மீனவர்கள் 4 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் அழைத்து கொண்டு சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony