காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு

Image Unavailable

ஸ்ரீநகர், ஆக.7 - காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் செய்து இந்தியாவுக்குள் நுழைவது கடந்த இரு மாதங்களாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் இரவு நேரங்களில் இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஊடுருவலை தடுக்க இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் இரவு பகலாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் மாநிலம் குப்புவாரா மாவட்டத்தில் நேற்று அதிகாலை நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது அவர்களை சரணடையும்படி இந்திய ராணுவத்தினர் எச்சரித்தனர். ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்திய ராணுவத்தினரின் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்தனர். இருந்தாலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். தீவிரவாதிகள் தரப்பில் யாரேனும் பலியானார்களா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. இந்த தகவலை ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ