முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே கைது ஒரு ஜனநாயக படுகொலை: நிதீஷ்குமார் கருத்து

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா,ஆக.- 17 - சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலையாகும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பாட்னாவில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  தலைநகர் டெல்லியில் அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு ஜனநாயக படுகொலை. மீண்டும் ஒரு எமர்ஜென்சிக்கு ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். இதை நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்து கொள்ள மாட்டார்கள். ஜனநாயகத்தின் மதிப்பு பற்றி டெல்லியில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அவர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கம் திரண்டிருக்கிறது. இதை பார்த்து மத்திய அரசே பயப்படுகிறது. அன்னா ஹசாரேவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அகிம்சை வழியில், அமைதி வழியில் அவர் போராட்டம் நடத்துகிறார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் மத்திய அரசு எமர்ஜென்சி போன்ற ஒரு நிலையை நினைவுபடுத்துகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலைதான் இப்போது நிலவுகிறது. இவ்வாறு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்தார்.
அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்னோ உட்பட நாடு முழுவதும் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பல்வேறு அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் ஹசாரேவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தி வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்று அங்கு இந்திய ஜனாதிபதியின் பெயருக்கு மனு ஒன்றையும் அளித்தார்கள்.  ஆனால் இந்திய பிரதமரோ, ஊழல் பிரச்சினைக்கு உண்ணாவிரதம் தீர்வாகாது என்று கூறுகிறார். டெல்லியில் நடந்த சுதந்திர தின விழாவில் அவர் இவ்வாறு பேசினார். ஊழலை பல நடவடிக்கை மூலமாகத்தான் ஒழிக்க முடியும் என்று கூறிய அவர், ஒரே ஒரு நடவடிக்கை மூலம் ஒழித்து விட முடியாது. இது ஒன்றும் மேஜிக் அல்ல என்றும் கூறியிருக்கிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்