முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.யை சேர்க்காததற்கு கிரண்பேடி கண்டனம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 22 - லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.யை சேர்க்காததற்கு அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண்பேடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா கடந்த செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் சில திருத்தங்கள் செய்யப்பட்டு நேற்று புதன் கிழமை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்றும் இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மத்திய அமைச்சரவையின் இறுதி வடிவத்திற்கு பிறகு இப்போது இந்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மசோதாவில் லோக்பால் வரம்பிற்குள் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. சேர்க்கப்படவில்லை. இதற்கு அன்னா ஹசாரே குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள கிரண் பேடி ட்விட்டர் இணையதளத்தில் கடுமையாக சாடியுள்ளார். சி.பி.ஐ. யை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகவே அந்த புலனாய்வு அமைப்பை லோக்பால் வரம்பிற்குள் மத்திய அரசு கொண்டுவரவில்லை என்று அவர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் கட்சிகளின் கடந்தகால ஊழல்களை மூடி மறைப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் கடந்தகால ஊழல்களை மூடி மறைத்ததுபோல இப்போது சி.பி.ஐ.யை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காகவே லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ. சேர்க்கப்படவில்லை. அரசு கட்டுப்பாட்டில் இருந்து சி.பி.ஐ.யை வெளியேற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி உதவ வேண்டும் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜையும், ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லியையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எந்த புலனாய்வு அமைப்பும் இல்லாத ஒரு புலனாய்வு குழு அமைக்கப்படுவதை நீங்கள் எங்கும் கேட்டதுண்டா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ.யை லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவராத ஒரு லோக்பால் மசோதாவை நிறைவேற்றவே தேவையில்லை.  யாரை யார் முட்டாளாக்குவது? என்றும் அவர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்