முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அருகே நீர் தேக்கம் அமைக்க ரூ.330 கோடி

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜன.25 - சென்னை மாநகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய நீர் தேக்கம் ஒன்றை அமைக்க ரூ. 330 கோடி, முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க செறிவு நீர்த் துளைகள் அமைக்கும் திட்டத்திற்காக 11.49 கோடி ரூபாய்க்கும் ஒப்புதல் வழங்கி உத்திரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்திட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும்,  மழைக்காலத்தில் கிடைக்கும் உபரி நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர்த் திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்ண்டி வட்டம் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளான கண்ணன் கோட்டை மற்றும் தேர்வைகண்டிகையை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி (1.00 பஙஇ) தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.   புதியதாக அமைக்கப்பட உள்ள இந்த நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்ண்டி வட்டம் பாலவாக்கத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், ஊத்துக் கோட்டை கிராமத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலும் அமையப்பெறும்.  

இதே போன்று, கண்டலேறு ண்டி கால்வாய் நெடுகை 0 மீட்டரிலிருந்து 6,800 மீட்டர் வரை ஒரு மண் அணை அமைக்கப்படும்.   மேலும் கண்டலேறு ண்டி கால்வாய் நெடுகை 900 மீட்டரிலிருந்து 7,500 மீட்டர் நீளத்தில் கால்வாய் ஒன்று அமைக்கப்படும்.  இந்தக் கால்வாய் தாமரைக்குப்பம், செஞ்சி, அகரம், பள்ளிக்குப்பம் கிராமங்கள் மற்றும் பள்ளிக்குப்பம் காப்பு வனத்தின் வழியாக செல்லும்.  இந்தக் கால்வாய் ஆந்திர மாநில நீர்பிடிப்பு பகுதியிலிருந்து கிடைக்கப் பெறும் நீரினை எடுத்துச் செல்கின்ற வகையில் அமைக்கப்படும்.  மேலும், நெடுகை 4,125 மீட்டரில் உபரிநீர் வழிந்தோடியும்,  நீரின் போக்கை சீராக்க சமநிலைப் பொறிகளும் அமைக்கப்படும்.   

இத்திட்டத்திற்காக 560.05 ஏக்கர் அரசு நிலம் உள்ளிட்ட 1,252.47 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும். இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுக் காலத்தில் முடிவு பெறும்.  இதன் மூலம் மழைக்காலத்தில் கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் தேக்கி வைக்கப்பட்டு, மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.

தற்பொழுது அதிக பயன்பாட்டின் காரணமாக, நிலத்தடி நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  எனவே நிலத்தடி நீரின் அளவினை அதிகரிக்க,  செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  இத் திட்டத்தின் கீழ் ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஒடைகளின் குறுக்கே தடுப்பணைகள், ஊருணிகள் ஆகியவை அமைக்கப்பட்டு செயற்கை முறையில் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது.   இத்திட்டத்தின் கீழ் , தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும் பாபநாசம் வட்டங்களில் செயற்கை முறையில் செறிவு நீர் துளைகள் அமைக்க, 63 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் செயற்கை முறையில் செறிவு நீர் துளைகள் அமைக்க,  1 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும்,  கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டு துளை கிணறுகள் அமைக்க, 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும்,   தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டத்திலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டு துளை கிணறுகள் அமைக்க, 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும்,  திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம், ஆகிய பகுதிகளில்  செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட தடுப்பு சுவர் அமைக்க 3 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 5 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கொல்லப்பள்ளி கிராமத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கீழ் மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் அமைக்க, 1 கோடியே 90 லட்சம் ரூபாயும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்,  கொருக்காத்தூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் அமைக்க,  2 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த 41 கிராமங்களில் உள்ள முறை சார்ந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செயற்கை முறையில் 100 செறிவுநீர் துளைகள் அமைக்கும் திட்டத்திற்கு 2 கோடியே 5 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 6 கோடியே 16 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணிகளுக்காக மொத்தம் 11 கோடியே 49 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேற்கூறிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் நீர்வள ஆதார அமைப்புகளில், நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்