முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐசிசி டெஸ்ட் போட்டி தரவரிசை: இந்தியாவுக்கு 7-வது இடம்

திங்கட்கிழமை, 12 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

துபாய் - ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில், இந்திய அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
 
ராகுல் டிராவிட், லட்சுமணன், சச்சின், கும்ப்ளே, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் போன்ற வீரர்கள் அணியில் இருந்தபோது அசைக்க முடியாத டெஸ்ட் அணியாக மிளிர்ந்தது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே டி20, ஒருநாள் போட்டிகளில் காட்டும் திறமையை, டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்றனர் இந்திய அணியினர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. கடைசி இரு டெஸ்ட் போட்டிகளை டிரா செய்தது. இருப்பினும், தொடரை இழந்ததால், இந்திய அணியின் தரவரிசை மளமளவென சரிந்துவிட்டது. ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில், இந்திய அணிக்கு 7வது இடமே கிடைத்துள்ளது. இதன் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான ரேங்க் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

தரவரிசை பட்டியலில் 124 புள்ளிகளுடன், தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் உள்ளது. 118 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 104 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 103 புள்ளிகளுடனும் முறையே, 3 மற்றும் 4வது இடங்களில் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் சோடை போய் வந்த நியூசிலாந்து, கடந்த ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது. இதன்விளைவாக 96 புள்ளிகளுடன் உள்ள இலங்கையை 6வது இடத்துக்கு தள்ளிவிட்டு, 99 புள்ளிகளுடன், நியூசிலாந்து அணி 5வது இடத்தில் உள்ளது.

இலங்கையைவிட ஒரு புள்ளி குறைவாக பெற்றுள்ள இந்திய அணி, 95 புள்ளிகளுடன், 7வது இடத்தில் பரிதாபமாக உள்ளது. இந்தியாவை தொடர்ந்து 76 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் 8வது இடத்திலும், 32 புள்ளிகளுடன் வங்கதேசம் 9வது இடத்திலும், 18 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே 10வது இடத்தில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து