முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா
Akhilesh-Yadav-2024-04-25

லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதி உள்பட 10 தொகுதிகளுக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.  இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி சார்பில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று  வேட்புமனு தாக்கல் செய்தார்.  ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் முன்னிலையில் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். 

இதற்கு முன்னதாக கண்ணூஜ் தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாடி கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். 

2000, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து