முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை புகழ்ந்த ஜனார்த்தன் துவிவேதி மீது நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசியதற்காக, தங்கள் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன் துவிவேதி மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எனினும், "மோடியை ஒருபோதும் நான் புகழ்ந்து பேசவில்லை. நான் கூறியது  தவறாக சித்திரிக்கப்பட்டு விட்டது' என்று ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்துள்ளார். "இந்தியத் தன்மையின் அடையாளமாக மோடி திகழ்கிறார்'  என்று ஜனார்த்தன் துவிவேதி பேசியதாக  ஊடகங்களில் செய்திகள்  வெளிவந்தன.

அவரது இந்தக் கருத்தை டெல்லி பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜக  தலைவர்கள் குறிப்பிட்டுப் பேசுகின்றனர். இது காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின்  பொதுச் செயலாளர் அஜய் மாக்கன், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்தியத் தன்மை என்பது தொடர்பாக காங்கிரஸ் கொண்டிருக்கும் கருத்துக்கு  நேர்மாறான கருத்தை துவிவேதி கூறியுள்ளார். மோடியின் வெற்றி என்பது  இந்தியத் தன்மையின் வெற்றி ஆகாது. ஜனார்த்தன் துவிவேதியின் கருத்தை  காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது.

பிரதமராக மோடியின் 7 மாத கால ஆட்சியையும், குஜராத் முதல்வராக அவர்  இருந்தபோது 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தையும் பார்த்தால்,  இந்தியத் தன்மையின் அடையாளமாக மோடி எப்போதும் இருக்க மாட்டார்  என்பது புரியும். டெல்லி மாநிலத்தில் கடந்த 7 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

மோடி அரசுதான் அதன் நிர்வாகத்தைக் கவனித்தது. அப்போது தில்லியின் திரிலோக்புரி, பவானா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. தேசத்தின் தலைநகரில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து  வரும் அதேவேளையில், மத்திய அமைச்சர்கள் ஆட்சேபகரமான கருத்துகளைப் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் மோடியை இந்தியத் தன்மையின் அடையாளம் என்று எவ்வாறு கூற முடியும்? எனவே, காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு மாறாக கருத்து கூறிய ஜனார்த்தன் துவிவேதி மீது கட்சி  மேலிடம் விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.  அவர்   கூறிய கருத்துக்கள் காங்கிரஸின் சித்தாந்தத்துக்கு எதிரானதாகும் என்றார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து