முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராகுல் காந்தியிடம் ப.சிதம்பரம் கோரியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அவர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகள் கூறினார். அவருக்கு பதில் அளித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஜெயந்தி நடராஜனுக்கு மட்டும் பதில் அளிக்காமல் கூடவே சேர்ந்து ப.சிதம்பரத்தையும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் மறைமுகமாக குறிப்பிட்டு கட்சியை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தார்.
 
இளங்கோவனின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதிருப்தி அடைந்த அவர் இளங்கோவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டனத்தை தெரிவித்தார். இது குறித்து இளங்கோவனிடம் கேட்டபோது சோனியா தன்னிடம் பேசியதை ஒப்புக்கொண்டு நான் ப.சிதம்பரத்தின் பெயரை குறிப்பிடவில்லை. பொதுவாகத்தான் குறிப்பிட்டேன் என்று சோனியாவிடம் விளக்கம் அளித்தாக கூறினார்.

இதற்கிடையே ப.சிதம்பரம் டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது இளங்கோவன் மீது ப.சிதம்பரம் புகார் கூறினார். காங்கிரஸ் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இளங்கோவன் கருத்து தொடர்பாக தனது ஆதங்கத்தையும் ராகுல்காந்தியிடம் வெளிப்படுத்தினார். அதற்கு ராகுல்காந்தி இளங்கோவனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது உறுதியான நிலைப்பாட்டை கூறினார்.

தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும், இளங்கோவனுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் குறித்தும் ப.சிதம்பரம் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் இளங்கோவன் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் கட்சி மேலிடம் இளங்கோவனை உடனடியாக டெல்லி வருமாறு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அவர் கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளார்.  இளங்கோவன் வெளியிட்ட கருத்தை கட்சி மேலிடம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காகத்தான் அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இளங்கோவன் கருத்துக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இளங்கோவனை கண்டித்து ஈரோடு உள்ளிட்ட சில இடங்களில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இளங்கோவனை பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்த இளங்கோவனை கண்டித்த சோனியாவுக்கு காங்கிரஸ் தொண்டர்களின் கோடானுகோடி நன்றி என்றும் வாசகம் ஒட்டப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து