முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 விக்கெட் வித்தியாசத்தில் யு.ஏ.இ. யை வீழ்த்தியது இந்தியா

சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015      விளையாட்டு
Image Unavailable

பெர்த் - 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் யு.ஏ.இ.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. உலக கோப்பை லீக் போட்டியில் பி பிரிவில் இந்திய அணி தொடர்ந்து 3வது வெற்றியை பெற்றதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெர்த் நகரில் நேற்று இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில், இந்தியா-யு.ஏ.இ அணிகள் மோதின. டாசில் வெற்றி பெற்ற யு.ஏ.இ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம்தான் செய்யப்பட்டிருந்தது. காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். யு.ஏ.இ அணி மாற்றமில்லாமல் களமிறங்கியது.

வேகப்பந்து மற்றும் பவுன்சர் பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். யு.ஏ.இ அணியின் தொடக்க வீரர் அம்ஜத் அலி 4 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஸ்வர் குமார் வீசிய பவுன்சரை அடிக்க முற்பட்டு டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரர் ஆன்ட்ரி பெரேன்கர், உமேஷ் யாதவ் பவுன்சரில் டோணியிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார். கிருஷ்ண சந்திரன் 4 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குர்ரம்கான் 14 ரன்கள் எடுத்தபோது அஸ்வின் பந்து வீச்சில், ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்தார். விக்கெட் கீப்பர் ஸ்வப்னில் பாட்டில் 7 ரன்களில், அஸ்வின் பந்து வீச்சில் தவானிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

ரோகன் முஸ்தபா 2 ரன்களில், மோகித் ஷர்மா பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அம்ஜத் ஜாவித் 2 ரன்களிலும், முகமது தாகிர் 1 ரன்களிலும் ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார்கள். முகமது நவீத் 6 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆனார். சைமான் அன்வர் மட்டும் சிறிது போராடி 35 ரன்கள் எடுத்தார். அவரும் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கிளீன் பௌல்ட் ஆக, 31.3 ஓவர்களில் யு.ஏ.இ பேட்டிங் முடிவுக்கு வந்தது.

பந்து வீச வந்த இந்திய பவுலர்கள் அனைவருமே விக்கெட்டுகளுடனே திரும்பினர். இந்திய தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக. 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து இந்தியா தனது பேட்டிங்கை தொடங்கியது.

ஸ்கோர் 29 ரன்களாக இருந்தபோது, ஷிகர் தவான் 14 ரன்களில் அவுட் ஆனார். முகமது நவீத் பந்து வீச்சில் ரோஹன் முஸ்தபாவிடம் கேட்ச் கொடுத்து தவான் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் போட்டியில் அரைசதம், 2வது போட்டியில் சதம் அடித்த தவான், இப்போட்டியில் சற்று ஏமாற்றம் அளித்தார்.

ஆனால் முதல் இரு போட்டிகளிலும் சொதப்பிய ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடி 55 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவர் ஃபார்முக்கு வந்தது இந்தியாவுக்கு நல்ல சேதியாக அமைந்தது. விராட் கோஹ்லி நிதானமாக ஆடி 33 ரன்கள் எடுத்தார். 18.5வது பந்தில் ரோகித் ஷர்மா பவுண்டரி விளாச, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது இந்தியா. மேன் ஆப் தி மேட்ச் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து