முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேவை போராடி வென்றது பாகிஸ்தான்

ஞாயிற்றுக்கிழமை, 1 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

பிரிஸ்பேன்  - உலகக் கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வேவிடம் கடைசி வரை போராடி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்.இந்த உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவுடன் தோல்வியுடன் சோகமாக தொடங்கியது பாகிஸ்தான். இந்தியாவை இதுவரை உலகக் கோப்பையில் வென்றதில்லை என்ற பெயரும் அது தக்க வைத்துக் கொண்டது. ஆனால் 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் பி பிரிவில் தனது 3வது போட்டியாக, ஜிம்பாப்வே அணியைச் சந்தித்தது பாகிஸ்தான். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான். ஆனால் ஜிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சில் ஆடி போனது பாகிஸ்தான். அதிரடியாக ரன் குவிக்கவே விடவில்லை ஜிம்பாப்வே வீரர்கள். அடுத்தடுத்து விக்கெட்களும் விழுந்தபடி இருந்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் 200 ரன்களையாவது தாண்டுவார்களா, 50 ஓவர்கள் முழுமையாக ஆடுவார்களா என்ற சந்தேகம் வந்து விட்டது.

ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். இதனால் கட்டையைப் போட்டபடி ஆடினர். தெண்டாய் சத்தாராவின் பந்து வீச்சில் 3 முக்கிய பாகிஸ்தான் வீரர்கள் வீழ்ந்தனர். சத்தாரா 35 ரன்களை மட்டுமே கொடுத்து பாகிஸ்தானை நிலை குலைய வைத்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் நசீர் ஜாம்ஷெட் 1, அகமது செஷாத் ரன் எதுவும் எடுக்காமலும் வீழ்ந்தனர். முதல் இரு ஓவர்களிலேயே இவர்கள் வெளியேரி விட்டனர். கேப்டன் மிஸ்பா உல் ஹக்கோ கட்டை வீரராக மாறி சரமாரியாக கட்டையைப் போட்டார். ரன் எடுக்கவே பல நேரங்களில் இவர் முயற்சிக்கவில்லை. காரணம் விக்கெட்டை காப்பாற்ற. ஆனால் மறு முனையில் விக்கெட்கள் சாய்ந்தவண்ணம் இருந்தன.

முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 14 ரன்களை மட்டுமே சேர்த்து மிகக் கேவலமான நிலையில் இருந்தது. அந்த அளவுக்கு கட்டையைப் போட்டனர் பாகிஸ்தான் வீரர்கள். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் மிக மோசமான பேட்டிங் இதுதான். ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடியைக் காட்டவே முடியவில்லை பாகிஸ்தானால். இருப்பினும் மிஸ்பா உல் ஹக்கின் ஆட்டம், (121 பந்துகளில் 73 ரன்கள்), உமர் அக்மல்லின் 33 ரன்கள், ஹாரிஸ் சொஹைலின் 27 ரன்களும் அணியை சற்றே நிமிர வைத்தது.

இருப்பினும் கடைசி நேரத்தில் பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் குவித்த 54 ரன்கள்தான் பாகிஸ்தானின் கெளரவத்தைக் காக்க உதவியது. மிஸ்பா, 3வது விக்கெட்டுக்கு ஹாரிஸ் சொஹைலுடன் இணைந்து 54 ரன்களையும், 4வது விக்கெட்டுக்கு உமர் அக்மல்லுடன் 69 ரன்களையும் சேர்த்தார்.ஷாஹித் அப்ரிதிக்கு நேற்று 35வது பிறந்த நாளாகும். எனவே அவர் அதிரடி காட்டலாம் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றி விட்டார். 3 பந்துகளே அவர் நீடித்தார்.

அடுத்து ஆட வந்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டம் சரிவரவில்லை. இதுவரை எந்த போட்டியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாத வேகப் பந்து வீச்சாள் முகம்மது இர்பான் இந்த முறை அடுத்தடுத்து முதல் 3 விக்கெட்களையும் சாய்த்தார்.சமு சிபபா 9 ரன்களில் வீழ்ந்தார். சிக்கந்தர் ரஸா 8 ரன்களில் போனார். ஹாமில்டன் மஸ்கட்ஸா சற்றுப் போராடி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவர்கள் விறுவிறுவென வீழ்ந்த நிலையில் பிரண்டன் டெய்ரும், சீன் வில்லியம்ஸும் போராட்டத்தில் குதித்தனர். டெய்லர் பிரமாதமாக ஆடிய நிலையில் சீன் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடினார். டெய்லர் 72 பந்துகளில் 50 ரன்களைத் தொட்ட நிலையில், வஹாப் ரியாஸ் பந்தில், மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். மறு முனையில் போராடிய சீன் வில்லியம்ஸ், 32 பந்துகளில் 33 ரன்களைக் குவித்து ரஹத் அலி பந்தில் வீழ்ந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்துதான் பாகிஸ்தான் தரப்புக்கு நம்பிக்கை பிறந்தது.
ஜிம்பாப்வேயின் நம்பிக்கையும் தகர்ந்தது.
அதன் பின்னர் போராட்டம் கிரேக் எர்வின், சாலமோன் மைரிடம் வந்தது. ஆனால் மைர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை இர்பான் வெளியேற்றினார். அவர் போன அடுத்த சில நிமிடங்களில் எர்வின் வெளியேறினார். அவரை வஹாப் ரியாஸ் 14 ரன்களில் வெளியேற்றினார். வெற்றி இலக்கை அழகாக துரத்தி வந்த ஜிம்பாப்வே பரிதாபமாக கடைசி நேரத்தில் விக்கெட்களைப் பறி கொடுத்ததால் வெற்றித் துரத்தலை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இருப்பினும் சிகும்பராவும், பன்யங்கராவும் கடைசி வரை விடாமல் வெற்றித் தேடலைத் தொடர்ந்தது பாகிஸ்தானியர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தது. இருவரும் கடைசி பந்து வரை விடாமல் போராடினர்.

கடைசி இரு ஓவர்களில் 28 ரன்களை எடுக்க வேண்டிய நிலை. ஆனால் 49வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை ரன்களாக மாற்றத் தவறியது ஜிம்பாப்வே. நான்காவது பந்தில் ஒரு சிங்கிள் கிடைத்தது. 5வது பந்தில் 2 ரன்கள் வந்தன. கடைசிப் பந்தில் ஒரு ரன்.50வது ஓவரில் 24 ரன்களை எடுக்க வேண்டும் என்ற கடினமான நிலைக்கு வந்து சேர்ந்தது ஜிம்பாப்வே. முதல் பந்து ரன்னாக மாறத் தவறியது. 2வது பந்தில் 3 ரன்களை எடுத்தது ஜிம்பாப்வே. 3வது பந்தில் மாவீரன் சிகும்பரா பரிதாபமாக ஆட்டமிழந்தார்.

சிகும்பரா. 34 பந்துகளில் 35 ரன்களக் குவித்த சிகும்பரா, பன்யங்கராவுடன் இணைந்து 47 ரன்களைச் சேர்த்து வெளியேறினார். இறுதி வரை போராடிய பன்யங்கராவும் அடுத்து ரன் அவுட் ஆக ஜிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் 215 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்தது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தான் தரப்பில் முகம்மது இர்பானும், வஹாப் ரியாஸும் தலா 4 விக்கெட்களைச் சாய்த்தனர். ரஹத் அலிக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பெற்றுள்ள முதல் வெற்றி இதுதான். அதுவும் கூட கடுமையாக போராடியதால் கிடைத்த வெற்றியாக மாறியிருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை வெறுப்படையவே வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து