முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் முதல்வரின் பேச்சால் அமளி: ராஜ்நாத்சிங் விளக்கம்

திங்கட்கிழமை, 2 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - காஷ்மீர் தேர்தல் குறித்து அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்த கருத்திற்கு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அதற்கு விளக்கமளித்தார்.

காஷ்மீரில் தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு பின் பாஜ, பி.டி.பி கூட்டணி ஆட்சி பதவியேற்றுள்ளது. முதல்வராக முப்தி முகமது சயீது பதவியேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் அமைதியாக நடக்க எல்லைக்கு அப்பால் உள்ள பாகிஸ்தான் மக்களும், தீவிரவாத அமைப்புகளும் தந்த ஒத்துழைப்புதான் காரணம் என்றும் அதனால் தான் அதிகளவில் ஓட்டுப் பதிவானது என்றும் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா, பி.டி.பி கூட்டணியை பொருந்தாத கூட்டணி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன.

இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து காஷ்மீர் தேர்தல் அமைதியாக நடந்ததற்கு முதல்வர் முப்தி முகமது சயீது பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினர். இதே போல் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். முப்தி முகமது பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
உடனே ராஜ்நாத்சிங் எழுந்து விளக்கம் அளித்து பேசுகையில்,
 
காஷ்மீர் தேர்தல் தொடர்பாக  முப்தி முகமது கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. இதில் மத்திய அரசுக்கோ, பாரதீய ஜனதாவுக்கோ எந்த உடன்பாடும் கிடையாது. பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய பிறகே நான் இந்த கருத்தை தெரிவிக்கிறேன். காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடக்க தேர்தல் கமிஷன், ராணுவம், துணை ராணுவ படைகள் மற்றும் காஷ்மீர் மாநில மக்கள்தான் காரணம். அவர்களைத்தான் இந்த பாராட்டு போய் சேரும்.
காஷ்மீர் தேர்தல் தொடர்பாக முப்தி முகமது பிரதமருடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்று ராஜ்நாத்சிங் விளக்கமளித்து பேசினார்.
 
ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டனர். பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சிகளை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அமைதிப்படுத்த முயன்றும் அமளி நீடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து