முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் பணி தொடக்கம்

புதன்கிழமை, 4 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - வாக்காளர் பட்டியலை முழுமையாக திருத்தும் பணி தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அரசியல் கட்சித்தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை முழுமையாக திருத்தும் பணி, மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் தலைமை அலுவலகம் இதற்கான பணியில் இறங்கியது. இதன் அடிப்படையில் அடுத்த இரண்டு மாதங்களில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இருப்பதை நீக்குவது, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை தெளிவாகவும், தவறில்லாமலும் பதிவு செய்வது அதன் நோக்கமாகும்.

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம், தொடங்கியதுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையும் நடத்தியது.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, தேர்தல் பிரிவு பொறுப்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், வழக்கறிஞர் கிரிராஜன், பரந்தாமன்( திமுக) , பார்த்தசாரதி எம்.எல்.ஏ( தேமுதிக) வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் ( காங்கிரஸ்,) கே.டி.ராகவன், சக்கரவர்த்தி( பாஜக,) இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு, தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வாக்காளர் பட்டியலை திருத்தும் திட்டத்தின் நோக்கம், வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களின் விவரங்களை சரிப்படுத்தி திருத்தம் செய்து, புகைப்படம் தரமுடையதாக மாற்றுவதாகும்.மேலும், அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண், குடும்பத் தலைவர் அல்லது வாக்காளரின் செல்லிடைப் பேசி, மின்னஞ்சல் முகவரி ஆகியனவையும் கோரப்படும். இவை எதிர்காலத்தில் தேவையான தகவல்களை வாக்காளர்களிடம் இருந்து பெறுவதற்கு வசதியாக இருக்கும். இந்தப் புதிய நடைமுறை தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

புதிய திட்டம் தொடர்பாக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும். அரசியல் கட்சிகளின் பங்கு அதில் முக்கியம் என்பதால் அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர்களும் இதுதொடர்பாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

நான்கு நாள்கள் முகாம்: வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது, ஆதார் எண், செல்லிடைப் பேசி உள்ளிட்ட தகவல்களை அளிப்பதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 12, 26, மே 10, 24 ஆகிய தேதிகளில் இந்த முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இருந்தாலோ, குடும்பத்தில் யாரேனும் இறந்தாலோ, முகவரி மாற்றம் இருந்தாலோ அதுகுறித்த விவரங்களைத் தெரிவித்து பெயர்களை நீக்கலாம். இதற்கென உரிய விண்ணப்பப் படிவத்தை சிறப்பு முகாமின் போது சமர்ப்பிக்கலாம்.

மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகங்களில் (தாலுகா, மாநகராட்சி அலுவலகங்கள்) திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகலில் விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த மனுக்களின் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக, வாக்குச்சாவடி தோறும் விழிப்புணர்வுக் குழுக்கள் உருவாக்கப்படும்.

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு வசதியாக, ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அதேசமயம், ஆதார் எண் இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்பது கட்டாயமில்லை. ஆதார் எண்ணை தேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலமும், 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல், செல்போன் விண்ணப்பத்தை , 1950 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும், சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் தனி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தும் கொடுக்கலாம்
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து