முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளங்கோவன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன் பாரத பிரதமர் நரேந்திர மோடியை அநாகரீகமான வார்த்தைகளில் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டதற்கு அவர் கொடுத்திருக்கும் பதில் பெரும் ஏமாற்றத்தை தருவதாக உள்ளது. மன்னிப்பு கேட்பது என்பது தங்களின் பரம்பரைக்கே கிடையாதென்று அவர் கூறி இருக்கின்ற பதில், தன்னைப் போன்றே தன் மூதாதையர்களும், மரியாதைக்குரிய தேச தலைவர்களை கொச்சையாக பேசி உள்ளார்கள் என்பது போன்றும், அவர்கள் அதற்காக மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்று கூறுவது போன்றும் அமைந்துள்ளது.

இளங்கோவனின் தந்தையும், அவர்களின் குடும்பமும் எந்த அரசியல் தலைவரையும் அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சித்தார்கள் என்று நான் ஒரு பொழுதும் கேள்விப்பட்டதில்லை. எனவே, தன் குடும்பத்தை சேர்ந்தவர்களை இப்பிரச்சினைக்கு துணையாக இளங்கோவன் அழைப்பது அரசியல் நாகரீகம் இல்லை என்றே நான் கருதுகிறேன். எனவே, இளங்கோவன் தன் தவறுகளை நியாயப்படுத்த மரியாதைக்குரிய தன் குடும்பத்தை தேவையின்றி இழுக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் இளங்கோவன், பாரதப் பிரதமர் குறித்து பேசிய வார்த்தைகள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால்தான் அதனை அவர் திரும்பப் பெறவேண்டும் என்றும் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். சோனியா காந்தியை யாரும் கொச்சைப்படுத்தி அநாகரீகமான முறையில் பேசுவதை நானோ, பா.ஜனதா கட்சியோ ஒரு போதும் ஏற்றுக்கொண்டதில்லை.

அதே நேரம், அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் அரசியல் ரீதியான விமர்சனங்களை சோனியா மீது வைப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இளங்கோவன் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ, அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலைகளை எல்லாம் கடந்து 125 கோடி மக்களுக்கும் சொந்தமானவராக, உரிமை படைத்தவராக, இந்திய நாட்டின் கவுரவமிக்க பிரதமராக உலக நாடுகளால் போற்றப்படுகிறார்.
இந்தியப் பிரதமரை அநாகரீகமாக விமர்சிப்பது இந்தியத் திருநாட்டையும், ஒவ்வொரு இந்தியரையும் அவமதித்ததற்கு சமம் என்பது இளங்கோவன் அறியாத ஒன்று அல்ல. இந்திய நாட்டின் பிரதமரை தரக்குறைவாக கொச்சைப்படுத்தும் வகையில் இளங்கோவன் பேசியதோடு மட்டுமல்லாமல், அதை நியாயம் கற்பிக்க பொருத்தமில்லாத வாதத்தை முன் வைப்பது அவரது தகுதிக்கு பொருத்தமானதாக நான் கருதவில்லை. எந்த தவறும் செய்யாத, இந்திய மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடியை காரணமின்றி விமர்சித்த இளங்கோவன் அநாகரீகமான தனது வார்த்தைகளை திரும்பப் பெறுவதுதான் அவருக்கு அழகு.

எனவே, இளங்கோவன் பாரதப் பிரதமர் குறித்து பேசிய அவதூறான சொற்களை திரும்பப் பெறுவதோடு, அதற்கான வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து