முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வித்திட்டத்திற்கான நிதியை 75 சதவீதம் அதிகரிக்க பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கட்கிழமை, 5 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி யை மேலும் குறைக்க்கூடாது என்றும் ,. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, குறைந்தபட்சம் 75 சதவீத நிதியை இந்திய அரசு வழங்குமாறு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் .நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்த கடிதத்தில்,கூறியிருப்பதாவது:

சர்வசிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்குமான கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிவரும் நிதியுதவி ஏற்கனவே 65 சதவீதமாக குறைத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைவருக்குமான கல்வி திட்டத்திற்கு மேலும் குறைக்க மத்திய அரசு தன்னிச்சையாக முயற்சி மேற்கொண்டுள்ளதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். .

2015-2016-ம் ஆண்டிற்கான சர்வசிக்ஷா அபியான் திட்ட அனுமதி வாரியத்தின் 216-வது கூட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் நிதிப் பகிர்வை 65க்கு 35 என்ற விகிதாச்சார அடிப்படையில் ரூ 2 ஆயிரத்து 329 கோடியே 15 லட்சம் ஒதுக்கீட்டை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அங்கீகரித்தது - திட்டத்திற்கான செலவில் 35 சதவீதத்தை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்றும் கோரியிருந்தது - இந்த தெளிவான முடிவின்படி, தமிழ்நாடு அரசின் 2015-2016-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், உரிய ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மே மாதம் 15-ம் தேதி இடைக்கால ஒதுக்கீடாக 389 கோடியே 31 லட்சம் ரூபாயை விடுவித்தது- இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி 162 கோடியே 78 லட்சம் ரூபாய் முதல் தவணையின் எஞ்சிய தொகைக்காக விடுவிக்கப்பட்டது- தமிழக அரசு 50 சதவீத நிதியை ஒதுக்குமாறு கையால் எழுதப்பட்ட திருத்த குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது - கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில், 65 சதவீதத்திற்கு பதிலாக, மொத்த ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்காக இனி 65 சதவீத நிதிக்கு பதிலாக 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

14-வது நிதி கமிஷன் பரிந்துரைகளின்படி, மாநில அரசுகளுக்கு வரி பகிர்வு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு சார்பிலான திட்டங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதிஒதுக்கீடு செய்யும் முறையில், திருத்தங்கள் குறித்து இறுதி செய்யப்படும் வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மக்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் நமது தேசிய லட்சியமான, கல்வி பெறும் உரிமைச் சட்டம்-2009-ஐ நடைமுறைப்படுத்துவதற்கு, சர்வசிக்ஷா அபியான் மிக முக்கியமான திட்டமாகும் - எனவே, இந்தத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் - இந்த நோக்கம், நடப்பு 2015-2016 நிதிநிலை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது - நிதிநிலை அறிக்கையில் செலவினம் குறித்த முதல் பகுதியின் 8-வது பிரிவில், முழுக்க முழுக்க மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய திட்டங்கள் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதோடு, மத்திய நிதியுதவி பெறும் இனத்திலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும், குறிப்பிட்ட அளவு நிதி பெறக்கூடிய திட்டங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது - சர்வசிக்ஷ அபியான் என்பது மத்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் தொடர வேண்டிய திட்டம் என 14-வது நிதி ஆணையம் சிபாரிசு செய்துள்ளது

2015-2016-ம் ஆண்டு (மத்திய) நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் வழங்கப்பட்டதோடு, நாடாளுமன்றமும் ஒப்புக்கொண்டுள்ள இந்த நிலையிலிருந்து பின்வாங்குவது சரியானதாக இருக்காது என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  மேலும், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்குத்தொகை, மையப்படுத்தப்பட்ட மத்திய வரிகள் மீது விதிக்கப்படும் கல்வித்தீர்வை மூலம் நேர்செய்யப்படுகிறது - தீர்வை மற்றும் கூடுதல் வரிகள் மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தை மத்திய அரசு மட்டுமே வைத்துக் கொண்டு, மாநிலங்களுக்குப் பகிர்ந்து தராத நிலை உள்ளது - கல்வி மீதான தீர்வை சரியானதல்ல - அதன் அடிப்படையில், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கினை குறைப்பது நியாயமற்றது

மத்திய அரசு நிதியுதவி வழங்கக்கூடிய திட்டங்களை பரிந்துரைப்பதற்காக, மாநில முதலமைச்சர்களைக் கொண்டு நிதி ஆயோக் நிர்வாக துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது - இதில், தமிழ்நாடு எடுத்துள்ள நிலை, மாநிலங்கள் மீது நிதிச்சுமையை ஏற்றக்கூடாது என்பதுதான் - மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் அதன் பங்கு, குறைந்தது 75 சதவீதமாவது இருக்க வேண்டும் - நிதி ஆயோக் நிர்வாக துணைக்குழுவின் அறிக்கை பிரதமரிடம் மிக விரைவில் வழங்கப்படும் என்று தெரிய வருகிறது - உயர்மட்ட அளவில் அதுகுறித்து கவனிக்கப்படும்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை விரும்பும் வகையில், சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கை குறைப்பது என்பது தேவையற்றது

6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கும், நலிவுற்ற மற்றும் வாய்ப்புகளற்ற குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்க தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது - 2015 - 2016-ம் ஆண்டில் மட்டும் மாநில வரவு - செலவு திட்டத்தில் பள்ளிக்கல்விக்காக ரூ 20 ஆயிரத்து 936 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - 65:35 என்ற மத்திய, மாநில பங்கீட்டு அளவை கருத்தில் கொண்டு, கல்விச்சட்ட உரிமையை திறம்பட அமல்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு உருவாக்கியுள்ளது - இந்த நிதி ஒதுக்கீட்டு முறையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என்ற நம்பிக்கை இருந்தது - இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய வரவு, செலவு திட்டத்தில் தெளிவான குறிப்பு இடம் பெற்றதோடு, 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி மக்களவையில் நட்சத்திர வினா எண் 508-க்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அளித்த பதிலில், சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு தற்போதைய 65:35 என்ற மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டு அளவில் எந்த மாற்றமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்

ஆனால், 14-வது நிதி கமிஷனின் பரிந்துரைகள் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன - மேலும், குறிப்பிட்ட நோக்கங்களுக்கான பல மானியங்கள் நீக்கப்பட்டதோடு, தமிழகத்தின் அடித்தள பங்களிப்பை 19.14 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலம், 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரித்து வழங்கப்பட்ட அதிகாரம் மூலம் கிடைத்த பயன்கள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன - 14-வது நிதி கமிஷனின் பரிந்துரைகளின் விளைவாக ஆண்டொன்றுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கும் நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது - பங்கீட்டு அளவை 65:35-லிருந்து 50:50 என மாற்றும் ஒருதலைப்பட்சமான முடிவு, தேசிய முன்னுரிமையான சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதை சீர்குலைக்கும் - பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் வகையில், நிதியமைச்சகம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிடவேண்டும் - சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான தற்போதைய பங்கீட்டு அளவான 65:35 என்ற முறையை மீண்டும் பின்பற்ற ஆவன செய்யவேண்டும் இவ்வாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்