முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச வண்ணத் தொலைகாட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி: விழுப்புரம் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம், இலவச வண்ணத் தொலைகாட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி. 21 அங்குலம் வழங்காமல் 14 அங்குல தொலைகாட்சி பெட்டிதான் வழங்கினார்  என்று விழுப்புர பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான முதல்வர் ஜெயலலிதா நேற்று (வெள்ளிக் கிழமை), விழுப்புரம், திருச்சி பைபாஸ்-விழுப்புரம் செல்லும் வழியில் உள்ள ஆவின் பால் பண்ணை எதிரில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவர் சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு விழுப்புரம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது.,

தி.மு.க.-வினர் 2006-ம் ஆண்டு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர்.  பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவே இல்லை. அவர்கள் நிறைவேற்றாத சில திட்டங்களைப் பற்றி நான் ஏற்கனவே காஞ்சிபுரம் மற்றும் திருச்சி பொதுக் கூட்டங்களில் தெரிவித்திருந்தேன்.  தற்போது, தி.மு.க 2006-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நிறைவேற்றாத மேலும்  சில வாக்குறுதிகளைப் பற்றி இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.  தமிழகத்தில் போதுமான குடியிருப்பு வசதி உருவாக்குவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என தி.மு.க அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நவீன வசதிகளுடன் கொண்ட புதிய புறநகரங்களை உருவாக்கி, அங்கே அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவோம் என்ற வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டவர்கள் தான் தி.மு.க-வினர். தேசிய விளையாட்டு நிறுவனம் ஒன்றை தமிழகத்தில் உருவாக்குவோம் என்ற வாக்குறுதி, ஒவ்வொரு முக்கிய விளையாட்டிற்கும் ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி, விளையாடத் தேவையான சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை. 

வணிக வெளிப்பணி மையங்கள் அதாவது, BPO-க்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குவதற்கு வழி வகை செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை கடலூர் முதல் கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தப்படும் என்ற வாக்குறுதிக்கு எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரையிலான 314 கி.மீ. நீளச் சாலை 125 கோடி ரூபாயில் மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள், உலக வங்கி கடன் உதவியுடன் தற்போதைய எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது. அதே போல், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான சாலையில் 13 நகரங்களுக்கு புறவழிச் சாலை அமைத்தல் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல், அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் 257 கோடி ரூபாய் செலவில் தற்போதைய எனது தலைமையிலான அ.தி.மு.க அரசினால் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருணாநிதியைப் பொறுத்தவரை, தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசி விடுவார்.  பின்னர் அதைச் செயல்படுத்தும் போது, அந்த திட்டத்தினால் தனக்கும் ``தன் மக்களுக்கும்'' என்ன ஆதாயம் கிடைக்கும்'' என்று பார்ப்பார். திட்டங்களினால் தங்களுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்றால் அந்த திட்டத்தையே செயல்படுத்தமாட்டார் கருணாநிதி. அதனால் தான், நான் தற்போது தெரிவித்த திட்டங்களை எல்லாம் கருணாநிதி செயல்படுத்தவில்லை. கருணாநிதி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து செயல்படுத்திய திட்டம் ஒன்று இருக்கிறது.  அது தான் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்.  இந்த திட்டத்திலும் மக்களை ஏமாற்றவே செய்தார் கருணாநிதி.  எப்படி என்று கேட்கிறீர்களா? 2006-ம் ஆண்டில் வண்ண தொலைக்காட்சி பெட்டி என்றாலே ‘21 Inch’ தொலைக்காட்சி என்று தான் மக்கள் நினைத்தார்கள்.  ஏனெனில், சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது 21 Inch தொலைக்காட்சி பெட்டி தான்.  கருணாநிதிக்கு  இந்த திட்டத்தின் மூலம் தன் குடும்பத்திற்கு கிடைக்கும் ஆதாயம் தான் முக்கியம்.  எனவே தான்  மக்களை ஏமாற்றும் விதமாக 14 Inch வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கினார்.  மக்கள் 21 Inch தொலைக்காட்சிப் பெட்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில், 14 Inch வண்ண தொலைக்காட்சி பெட்டியை வழங்கினார்.  2006-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னரே இலவச தொலைக்காட்சி பெட்டிக்கு கேபிள் இணைப்பு வேண்டுமே, அதற்கு மாதா மாதம் பணம் கட்ட வேண்டுமே, அதை யார் தருவார்கள் என மக்கள் கேள்விகள் கேட்ட போது, கருணாநிதி ``இலவச கேபிள் இணைப்பையும் கொடுத்து தொலைக்கிறேன்'' என்று கூறி மக்களை ஏமாற்றினார்.

இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டமே, தன் குடும்பத்திற்கு வருமானம் சேர்க்கும் திட்டம் தானே? எனவே தான், ``கொடுத்து தொலைக்க வேண்டியதை'' மறந்து விட்டார் கருணாநிதி. எதைக் கொடுத்து தொலைக்கிறேன் என்று சொன்னாரோ, அதை மறந்துவிட்டார் கருணாநிதி.  இந்த இலவச தொலைக்காட்சி பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்க்க பாவம் மக்கள் கேபிள் இணைப்புக்கு மாதா மாதம் அதிக பணம் கட்ட வேண்டியிருந்தது. கேபிள் தொழிலையே அப்போது ஆட்டிப் படைத்தது கருணாநிதியின் பேரன்கள் தானே?  கேபிள் இணைப்புக்கு பெறப்பட்ட சந்தா தொகை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டியவர்கள் தான் கருணாநிதியின் குடும்பத்தினர்.

2011-ம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக எண்ணிக்கையிலான தொலைக்காட்சி சேனல்களை வழங்கி வருகிறோம். 70 லட்சத்திற்கும் மேல் உள்ள சந்தாதாரர்கள் இதனால் பயன் பெற்று வருகின்றனர்.  தற்போது 2016-ம் ஆண்டும் கருணாநிதி பல தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால், அவர் மறந்தும் கூட குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி இணைப்பு தொடர்ந்து வழங்கப்படும் என சொல்லவே இல்லை.

தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க உங்களை நாடி  வரும் போது, 70 ரூபாய்க்கு பதிலாக 250 ரூபாய் கேபிள் கட்டணம் செலுத்தவா உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு அவர்களை விரட்டியடியுங்கள்.  இப்பொழுது நீங்கள் செலுத்துகின்ற கட்டணம் கேபிள் டிவி இணைப்புக்கு மாதம் 70 ரூபாய்.  தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் 250 ரூபாய்.  இதை சொல்லியே நீங்கள் தி.மு.க-வினர் வாக்கு கேட்க வந்தால் துரத்தியடிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்