முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200-வது வெற்றியை பதிவு செய்தார் ரபெல் நடால்

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      விளையாட்டு
Image Unavailable

பாரீஸ்  - பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 200-வது வெற்றியை பதிவு செய்தார் ரபெல் நடால் சாதனை. இதன்மூலம் பட்டியலில் இணைந்துள்ளார். ஜோகோவிச், செரீனா, பாக்சின்ஸ்கியும் அபாரம்‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ்சுடன் மோதினார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் 7-5, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டார்சிஸ்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். 9 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) தன்னை எதிர்த்து களம் இறங்கிய அர்ஜென்டினாவின் பாகுன்டோ பாக்சிசை 6-3, 6-0, 6-3 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடாலின் 200-வது வெற்றியாக இது பதிவானது. இந்த மைல்கல்லை எட்டிய 8-வது வீரர் நடால் ஆவார். கிராண்ட்ஸ்லாமில் அதிக ஆட்டங்களில் வென்றவர்களின் வரிசையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (302 வெற்றி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு), பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), அல்ஜாஸ் பெடேன் (இங்கிலாந்து), போர்னா கோரிச் (குரோஷியா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரானோலர்ஸ் (ஸ்பெயின்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), சோங்கா(பிரான்ஸ்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 9-ம் நிலை வீராங்கனை டைமியா பாக்சின்ஸ்கி (சுவிட்சர்லாந்து), கனடா புயல் பவுச்சார்ட்டை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் தடுமாறிய வளரும் நட்சத்திரமான பாக்சின்ஸ்கி 1-4 என்ற கணக்கில் பின்தங்கினார். அதன் பிறகு வெகுண்டெழுந்த பாக்சின்ஸ்கி தொடர்ச்சியாக 10 கேம்களை கைப்பற்றி, பவுச்சார்ட்டை மிரள வைத்தார். முடிவில் பாக்சின்ஸ்கி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 

இன்னொரு ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் டெலியானா பெரேராவை (பிரேசில்) நொறுக்கி 3-வது சுற்றை அடைந்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை இவானோவிச் (செர்பியா) 7-5, 6-1 என்ற நேர் செட்டில் குருமி நராவை (ஜப்பான்) வெளியேற்றினார். சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), கரின் னாப் (இத்தாலி), வீனஸ் வில்லியம்ஸ்(அமெரிக்கா) ஆகியோரும் 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ், சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா லிங்கிசுடன் கைகோர்த்து களம் புகுந்தார்.

இவர்கள் முதலாவது சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்ன லினா குரோனி பெல்டு (ஜெர்மனி)- ராபர்ட் பாரா (கொலம்பியா) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர்.  இந்திய வீராங்கனை சானியா மிர்சா, குரோஷிய வீரர் இவான் டோடிக்குடன் சேர்ந்து கலப்பு இரட்டையர் முதலாவது சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகன்சன்-லமாசின் (பிரான்ஸ்) ஜோடியை சாய்த்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்