முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் டிரா: தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா அணி

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

போர்ட் ஆப் ஸ்பெயின் : இந்தியா– மே.இ.தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட்டில், மைதானம் சேதமடைந்ததால் கடைசி நாள் ஆட்டம் ரத்தாகி ‘டிரா’வில் முடிந்தது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலிருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு பின்தங்கியது. பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மே.இ.தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலாவது மற்றும் 3–வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. 2–வது டெஸ்ட டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 18–ந்தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள்  அணி 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு மழை மற்றும் மோசமான அவுட் பீல்டு காரணமாக 2, 3, 4–வது நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ஈரப்பதத்தை உலர வைக்க பயன்படுத்தப்படும் ‘சூப்பர் சாப்பர்’ எந்திரம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இல்லை. அதிகமான ஈரப்பதத்தால் மைதானத்தின் பல பகுதி சேதமடைந்தது. அதை முழுமையாக சீர் செய்ய முடியவில்லை. கடைசி நாளான நேற்று முன்தினம் வெயில் அடித்த போதிலும், ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லை என்று கூறி நடுவர்கள் கடைசி நாள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். அதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. தொடரை இந்திய அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நிலைமை இருந்தது. ‘டிரா’ ஆனதால் 2 புள்ளியை இழந்துள்ள இந்தியா 110 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இரண்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி அடுத்து அமெரிக்காவுக்கு செல்கிறது. அங்கு மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இரண்டு டி-20 போட்டிகளில் மோதுகிறது. முதலாவது டி-20 போட்டி வருகிற 27–ந்தேதி நடக்கிறது.

ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசை வருமாறு:–
1. பாகிஸ்தான் (111 புள்ளி).
2. இந்தியா (110 புள்ளி).
3. ஆஸ்திரேலியா (108 புள்ளி).
4. இங்கிலாந்து (108 புள்ளி).
5. நியூசிலாந்து (99 புள்ளி).
6. இலங்கை (95 புள்ளி).
7. தென்ஆப்பிரிக்கா (92 புள்ளி).
8. வெஸ்ட் இண்டீஸ் (67 புள்ளி).
9. வங்காளதேசம் (57 புள்ளி).
10. ஜிம்பாப்வே (8 புள்ளி).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்