முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.25 கோடி செலவில் ஆதார் உள்ளிட்ட அட்டைகள் இ- சேவை மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, ரூ.25 கோடி செலவில் ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இ சேவை மையங்கள் வாயிலாக.  செயல்படுத்தப்படும்.என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:-

தேசிய மக்கள்தொகை பதிவு ஆவணத்திலிருந்து பெறப்படும் குடிமக்களின் உயிரியத் தகவலுடன் கூடிய தனிநபர் பற்றிய தகவல் தொகுப்போடு ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பொது அடையாள எண் ஆணையகம் ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளாராக தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை அங்கீகரித்துள்ளது. 

குடிமக்களுக்கும், அரசு துறைகளுக்கும் சிறந்த சேவைகளை வழங்கிட ஏதுவாக, ஆதார் பதிவுகளை மேற்கொள்ளவும், மாநில மக்கள் தொகை பதிவேட்டினை பராமரிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மாநிலம் முழுவதும் 650 நிரந்தர பதிவு மையங்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த நிரந்தர பதிவு மையங்களை தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை பராமரிக்கும்.  முதற்கட்டமாக, இந்நிரந்தர பதிவு மையங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தாலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னை நீங்கலான இதர மாநகராட்சிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும். அரசு  இ-சேவை மையங்களில்  நிறுவப்பட்டு, ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்படும். ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இ சேவை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும்.  இத்திட்டம் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசின் சேவைகள், சம்பந்தப்பட்ட துறைகளின் வாயிலாக, பொதுமக்களுக்கு, இணையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.  தற்போது, பெருவாரியான மக்கள், சிறந்த தொழில்நுட்ப வசதியுள்ள கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அரசு சேவைகள் கைபேசி செயலிகள் வாயிலாக  அளிக்கும் வகையில் "அம்மா  இ-சேவை" என்ற  ஒரு திட்டத்தினை  செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். முதற்கட்டமாக 25 முக்கிய சேவைகள் இத்திட்டம் வாயிலாக வழங்கப்படும். இந்த கைபேசி செயலித் திட்டம் 1 கோடி ரூபாய்  செலவில் செயல்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் மின் ஆளுமை இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை ஆழ்வார்பேட்டையிலும்,  தமிழ்நாடு  அரசு கேபிள் டிவி நிறுவனம்,  சென்னை எழும்பூர் மற்றும் நுங்கம்பாக்கத்திலும் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

இந்நிறுவனங்களுக்காக கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக இடத்தில்  5 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் ஒன்று கட்டுவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.   இக்கட்டடத்தில், தற்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மின் ஆளுமை இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆகியவை செயல்படும். இந்த  நடவடிக்கைகள்  மூலம், தகவல் தொழில்நுட்பத்தின் பயன் பொதுமக்களை எளிதில் சென்றடைய வழிவகை ஏற்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்