முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு திருக்கோயில்களில் களைகட்டிய நவராத்திரி திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று சரஸ்வதி பூஜையும், நாளை விஜயதசமியும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் 7ம் நாளில் ஸ்ரீதாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதனையொட்டி, ரெங்கநாயகி தாயார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறைக்குச் சென்று அரையர்கள் சேவை கண்டு, பின்னர் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தாயார் திருவடி சேவை நடைபெறுவது சிறப்பம்சம்.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் ஆலயம், ஸ்ரீபிர்மன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நவராத்திரி விழா களைகட்டியது.  ஸ்ரீராமசுவாமி ஆலயத்தில் ஸ்ரீராமர் உள்ளிட்ட உபநாச்சியார்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈரோடு கள்ளுக்கடைமேடு அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில், தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் இருந்து வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய மாதாவிற்கு நன்றி செலுத்தும் வகையில், பரிகார பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பேராயர் தலைமையில் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது.

இதனிடையே இன்று நாடு முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள் அன்னை சரஸ்வதியை வழிபடுவார்கள். நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குழந்தைகளுக்கு தட்டில் அரிசியை வைத்து கல்வியை தொடங்குவார்கள். ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் நேற்று பூஜை பொருட்களை வாங்கிச்சென்றார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்