நீட் தேர்வை மத்திய அரசு கைவிட ஜி.கே வாசன் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      தமிழகம்
GK Vasan(N)

சென்னை  - நாடு முழுவதும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்விக்கொள்கை இல்லாததால் நீட் தேர்வு முறையை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,  ''நாடு முழுவதும் அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் 2016 ல் அனுமதி அளித்தது. இந்த நீட் தேர்வு மூலம் மருத்துவத்தில் இளம் மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.

நாடு முழுவதும் படிக்கின்ற மாணவர்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம் போன்ற பல்வேறு பாடத்திட்டங்களில் பயில்கின்றனர். ஆனால் நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ, என்.சி.ஆர்.டி ஆகிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது சி.பி.எஸ்.இ, என்.சி.ஆர்.டி ஆகிய பாடத்திட்டத்தின் கீழ் படிக்காத மாணவ, மாணவிகள் தான். குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத சூழல் ஏற்படும். இத்தேர்வு முறையினால் பல மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் முழுமையாக சேர்க்கை நடைபெறாமல் இருக்கின்ற சூழல் உருவாகும். 

மாநில உரிமைகளைப் பறிப்பதா ?:
நீட் தேர்வு முறைக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. காரணம் மத்திய அரசு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக மாநிலங்களின் கோரிக்கைகளை புறக்கணித்து மசோதாவை நிறைவேற்றியிருப்பது மாநில உரிமைகளைப் பறிப்பதோடு, அரசியல் சாசனத்திற்கும் எதிரானது. மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற கட்டாயம் அமல்படுத்தப்படுகிறது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் +2 வரை படிக்கின்ற மாணவர்கள் தங்களின் கடின முயற்சியால் இறுதித் தேர்வு எழுதி பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலே மேற்படிப்பை மேற்கொள்வது வழக்கமான ஒன்று. எனவே +2 முடித்த பிறகு மருத்துவ படிப்புக்கு மீண்டும் ஒரு தேர்வு முறை என்பது ஏற்புடையதல்ல. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்விக்கொள்கை இல்லாததால் இந்த நீட் தேர்வு முறையை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும். மேலும் தமிழக அரசு நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பினை அழுத்தமாக மத்திய அரசுக்கு தெரிவித்து தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் காத்திட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்: