முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிக்க லஞ்சம் தரும் அமைச்சர் பாரிக்கர்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

 பனாஜி  - வாக்களிக்க லஞ்சம் தருவது தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கோவா மாநிலத்தில் கடந்த 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 29-ம் தேதி, பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். வடக்கு கோவா பகுதியில் உள்ள கொங்கனி பொதுக்கூட்டத்தில் பாரிக்கர் பேசும்போது, ‘‘உங்களுக்கு (வாக்காளர்கள்) சிலர் 2000, 1000 அல்லது 3000 ரூபாய் தருவார்கள். அதை கணக்கிட்டுப் பாருங்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.1,500 தருவோம். ஐந்து ஆண்டு ஆட்சியில் அந்தப் பணம் ரூ.90,000 ஆகும். இந்தத் தொகை உயர்த்தப்படக் கூடும். எனவே, சுமார் ஒரு லட்சத்து 25 ரூபாய் அளவுக்கு உங்களுக்குக் கிடைக்கும்’’ என்றார்.

பாரிக்கர் மேலும் கூறும்போது, ‘‘யாரிடம் இருந்தாவது நீங்கள் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்களியுங்கள். எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், உங்கள் வாக்கு பாஜக.வின் தாமரைச் சின்னத்துக்குதான் செல்ல வேண்டும்’’ என்று பேசினார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் மற்ற கட்சியினர் புகார் தெரிவித்தனர். இதற்கு பதில் அளிக்கும்படி, பாரிக்கருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு கடந்த 3-ம் தேதி பாரிக்கர் பதில் அனுப்பினார். அதில், ‘‘என்னுடைய பேச்சு தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் என் பேச்சு அடங்கிய சி.டி. உண்மையானதல்ல, அதில் இருப்பது என்னுடைய குரலும் அல்ல. சந்தேகமாக இருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாரிக்கருக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதில், “சிடி.யை ஆய்வு செய்ததில் அது போலி அல்ல, உண்மையானதுதான் என்று தெரிய வந்துள்ளது. எனவே, உங்கள் பேச்சு குறித்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்