பாரதிய ஜனதா மீது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      அரசியல்
G Ramakrishnan 2016 12 05

அ.தி.மு.கவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் பா.ஜ.க ஆதாயம் தேட முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ,  ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சித்து வருகிறது. தமிழகத்தின் பாரம்பரியமான சமூக நீதி, மதச்சார்பின்மையை பின்னுக்குத் தள்ளி மதவெறி அரசியலை முன்நிறுத்த திட்டமிடுகிறார்கள். ஊழலுக்கு எதிராக தாங்கள் போர் தொடுத்திருப்பது போல பாஜக வெளி வேஷம் போடுகிறது. மோடி அரசு தமிழக நலன்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மோடி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

கவர்னர்களை வைத்து நாடகம் :
மத்திய பாஜக அரசு மாநிலங்களின் கவர்னர்களை தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் ஆளுநர்களின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. டில்லியிலும், புதுச்சேரியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக கவர்னர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் அவ்வாறே காய் நகர்த்தப்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரசும் இதே அணுகுமுறையையே பின்பற்றியது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: