இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்: ஐ.நா நடவடிக்கை எடுக்க வாசன் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      அரசியல்
GK Vasan(N)

சென்னை  - இலங்கை தமிழர்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.  இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ,  ''2002-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று என ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது உறுதியாகிவிட்டது. ஆனால் அவர்கள் மீது இதுவரையில் எந்த சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 34-வது கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தில் இலங்கையின் சார்பாக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இலங்கை அரசுக்கு 2015-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.

அமர்வில் தீர்மானம்
மேலும் இந்த தீர்மான வரைவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் தீர்மானம் சம்பந்தமாக வாய்மொழி அறிக்கையையும், 40 ஆவது அமர்வில் விரிவான எழுத்துமூல அறிக்கையையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது மனித உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்று, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடப்புக் கூட்டத்தொடரில் தனது வாதத்தை அழுத்தத்துடன் எடுத்துரைத்து இலங்கை தமிழர்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும்.

தமிழர்களுக்கு சம உரிமை
மேலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, சம அந்தஸ்து வழங்கப்படவும், தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவும், மறு குடி அமர்த்தல், மறு சீரமைப்பு போன்ற தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: