முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முடிகிறது

புதன்கிழமை, 22 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது.  முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., ஒ.பி.எஸ்.அணி, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி போன்றவை போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

8 முனைப் போட்டி
இதனால் 8 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லோகநாதன் ஆகியோர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர். தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் அவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மாலை வரை சுயேட்சைகள் உள்பட 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இன்று மனு தாக்கல்

தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக் கோட்டுதயம் ஆகியோர் நேற்று மனுதாக்கல் செய்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தினகரன், ஒ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன் மற்றும் தீபா, பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் இன்று  வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

பணிமனை திறப்பு

152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அறிவித்த டிடிவி தினகரன், நேற்று தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். தேர்தல் பணிமனையை திறக்கும் முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதையை செலுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோரும் மரியாதையை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபில் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தேர்தல் பணிமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் புடைசூழ தேர்தல் பணிமனையை டிடிவி தினகரன் திறந்து வைத்தார். இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ள டிடிவி தினகரன், வேட்புமனு தாக்கல் முடிந்த உடன் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இறுதிப்பட்டியல்

இன்று மாலையுடன் மனுத்தாக்கல் முடிகிறது. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் வருகிற 27-ம் தேதி ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதன் பிறகு வேட்பாளர்கள் பிரசாரம் சூடுபிடிக்கும்.ஏப்ரல் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்