முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெற்றி பெற்று தொடரையையும் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      விளையாட்டு
Image Unavailable

தர்மசாலா : தர்மசாலாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

தொடர் சமநிலையில் ...

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2–வது போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதையடுத்து இந்த தொடர் தற்போது 1–1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

32 ரன்கள் முன்னிலை ...

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் 111 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தது. 2-வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 118.1 ஓவர்களில் 332 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.

137 ரன்னில் சுருண்டது

இந்திய அணி முதல் இன்னிங்சில் 32 ரன்கள் முன்னிலை பெற்றது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமைந்தது. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது. ஆடுகளத்தின் தன்மை காரணமாக பந்து நன்றாக பவுன்ஸ் ஆனதுடன், அதிகமாக சுழலவும் செய்தது. இதனை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறியதுடன், விக்கெட்டையும் வேகமாக பறிகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 53.5 ஓவர்களில் 137 ரன்னில் சுருண்டது.

தொடர் வெற்றி ...

இதனை அடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி வெற்றிப் பாதையில் பயணிக்க தொடங்கியது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தில் 23.5 வது ஓவரில் இந்தியா 106 ரன்களை அடித்து வெற்றியை தனதாக்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. விராட் கோலி கேப்டனான பொறுப்பு ஏற்றபின்னர் 7 டெஸ்ட் தொடரை இந்தியா தொடர்ந்து வென்றுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்