முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது மாநில உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் - நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நீட்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்துவது மாநிலங்களின் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் தமிழக விவசாயிகளின்  குறைகளைப் போக்க  மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

தலைநகர் டெல்லியில் நேற்று நிதி ஆயோக் கொள்கை குழுவின் 3-வது ஆண்டுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில்  நடந்தது. இதில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
 தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் பதவியேற்ற பின்னர், ‘தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023’ குறித்த அறிக்கையின் வரைவைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டு, 24.3.2012 அன்று அத்திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.  இவ்வறிக்கை, “முன்னோக்குத் திட்டம்”  தயாரிப்பதற்கு சிறந்த மாதிரியாக விளங்குகிறது.

அறிவுசார் தலைநகரம்:-

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு வகை செய்வதே, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ன் முக்கிய நோக்கமாகும்.  இரண்டு முக்கிய காரணங்களின் அடிப்படையில், உட்கட்டமைப்பின் மீதான முக்கியத்துவம் இங்கு அவசியமாகியுள்ளது.  உட்கட்டமைப்பு மேம்பாடானது அதிக அளவிலான முதலீட்டை ஈர்த்து, அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதன் வாயிலாக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வது.  மேலும், மிக முக்கியமாக, அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் மற்றும்  சமுதாய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதன் வாயிலாக உட்கட்டமைப்பு மேம்பாடுகள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிலான ஆதாயமிக்க வெளிச்சூழல்களை உருவாக்குகிறது. அத்தகைய குறிக்கோள் சார்ந்த வளர்ச்சி விகிதங்களை எய்துவதற்கு புதிய முறைகள் ஒரு திறவுகோலாக அமையும் என்பதையும் கவனத்தில் கொண்டு, நாட்டின் “அறிவுசார் தலைநகரமாக” மற்றும் “புத்தாக்க” மையமாக தமிழ்நாட்டை மென்மேலும் உருவாக்குவதற்கு, இத்தொலைநோக்குத் திட்டம் வகை செய்கிறது. 

17 இலக்குகள்:-

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கேற்ப கட்டமைப்பு அடிப்படையிலான நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் 17 இலக்குகள் மற்றும் 169 குறிக்கோள்களை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை, தமிழ்நாடு அரசு ஏற்கனவே துவக்கியுள்ளது.  இந்தக் கட்டமைப்பு மூலம் பரிந்துரைக்கப்பட்ட இலக்குகளில் பலவும் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ல் குறிப்பிடப்பட்டு ஏற்கனவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.   ஐக்கிய நாடுகளால் குறிப்பிடப்பட்ட காலவரையறைக்கு முன்பாகவே, மாநிலத்திற்கான இத்தகைய இலக்குகளை அடைவதற்கு என்னுடைய தலைமையிலான அரசானது உறுதி பூண்டுள்ளது.  நீடித்த வளர்ச்சிகளின் இலக்குகளை அடைவதில் கண்டறியப்பட்ட இடைவெளிகளை நிரப்புவதற்கு தேவைப்படும் திட்டங்களுக்கு நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என நான் உறுதியாக வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் கடும் வறட்சி:-

இந்தக் கூட்டம் வேளாண் துறையில் இரு குறிப்பிட்ட திட்டங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறது.  அவையாவன, வேளாண் வளர்ச்சி குறித்த சிறப்பு பணிக் குழுவின் அறிக்கை மற்றும் ‘ உழவர் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்’ குறித்த அறிக்கை.  கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு உள்ளது.  2016 ஆம் ஆண்டு, வடகிழக்கு பருவ காலத்தின் மழைப்பொழிவு 62 சகவீதம் குறைந்தது. இதன் காரணமாக, தமிழ்நாடு வரலாறு காணாத கடும் வறட்சியை எதிர் நோக்குகின்றது.  இதனால், இம்மாநில உழவர்கள் வேதனையில் உள்ளனர்.  உழவர்களின் பிரதிநிதிகள் புது தில்லியில் கூட அவர்களுடைய குறைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.  நியாயமான குறைகளுக்கு,  இந்திய அரசு செவி சாய்க்க வேண்டியது  அவசியமானது.

தமிழ்நாடு, பாசனம் மற்றும் குடிநீர் வழங்கலுக்கான நீர்த்தேவையை நிறைவு செய்வதற்கு, மாநிலங்களுக்கிடையேயான ஆறுகளை, குறிப்பாக, காவேரி ஆற்றை சார்ந்துள்ளது.  காவேரி நீர் விவகாரங்கள் தீர்ப்பாயத்தின் இறுதி ஆணையைச் செயல்படுத்துவதற்காக காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீரை முறைப்படுத்தும் குழுவினை உடனடியாக அமைப்பதற்கான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நதிகள் இணைப்பு:-

நம் நாட்டிலுள்ள நீர் வளங்களை சரியான மற்றும் சமமான முறையில் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்வதற்கான நீண்ட காலத் தீர்வு என்பது ஆறுகளை ஒன்றிணைப்பதேயாகும்.  தீபகற்ப ஆறுகள் மேம்பாட்டு ஆக்கக்கூறுகளின் கீழ், நம் மதிப்பிற்குரிய  மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு ஆகிய ஆறுகளை ஒருங்கிணைப்பதற்கு இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  மேலும், மேற்கு நோக்கி பாயக்கூடிய பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளின் உபரி நீரை வைப்பாறுக்கு திருப்பி விடுவதற்கும் வலியுறுத்தி வந்தார்கள்.  27.02.2012 ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்ற ஆணையின் அடிப்படையில், எங்களின் தொடர்ச்சியான வேண்டுகோள் என்னவென்றால், ஆறுகளை ஒருங்கிணைப்பதற்காக இந்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, இன்னும் சிறந்த முறையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதேயாகும்.  மாநிலங்களுக்கிடையேயான அனைத்து ஆறுகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற எங்களுடைய  தலைவி மறைந்த ஜெயலலிதாவின் நியாயமான மற்றும் முறையான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.  இதன் மூலம், நாட்டின் நீர் வள ஆதாரங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படும்.

வருமானம் இரட்டிப்பு:-

பயிர் சாகுபடி, தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளம் உள்ளிட்ட துணை செயல்பாடுகளிலிருந்தும் வருமானங்களை அதிகரிக்கின்ற கூட்டு நடவடிக்கைகள் வாயிலாக உழவர்களின் வருமானங்களை இரு மடங்காக அதிகரிக்கும் இலக்கினை எய்த முடியும்.  இந்திய அரசினால் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு, குறிப்பாக, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாகக் குறைந்துள்ளது.   தமிழ்நாடு அரசு, பண்ணை வருவாய்களை  பெருக்குவதற்கு விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் ஆடுகள் வழங்குவதன் வாயிலாக கால்நடைப் பராமரிப்பினை மேம்படுத்த எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கால்நடைப் பராமரிப்பு உட்கட்டமைப்பினை மேம்படுத்த கடந்த 6 ஆண்டுகளாக சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  தரிசு நில உழவர்களின் வருவாயை நிலைப்படுத்த தரிசு நில வேளாண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  தோட்டக்கலைப் பயிர்களுக்கு உதவுவதன் மூலம் பலவகை பயிர்கள் ஊக்குவிக்கப்படுகிறது. உழவு உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு அடிப்படையாக உள்ள சுழற்சி வழங்கல் மேலாண்மை சந்தை ஒருங்கிணைப்பு மற்றும் உழவு உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு ஆதரவு ஆகிவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய அரசு வேளாண்-செய்முறைத் தொகுப்புகள் மற்றும் தொழில் பிரிவுகள் மேம்படுத்துவதற்கான திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.  இத்தகைய நடவடிக்கைகள் உழவர்களின் வருவாயை அதிகரிப்பதுடன் பண்ணைச் செயல்பாடுகளை நீண்டகாலத்திற்கு நிலைத்திட செய்யும்.

காப்பீட்டுத்தொகை:-

இந்த வறட்சி ஆண்டில், உழவர்களின் நடப்பு வருவாய் அளவாவது பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதி செய்வதற்கேனும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்,  இதற்கு வேளாண் காப்பீடு உதவியாக இருக்க வேண்டும்.   பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு  திட்டத்தை மேம்படுத்துவதற்காக ரபி பருவத்தில், 15 லட்சம் விவசாயிகள் 30 இலட்சம் ஏக்கர் பரப்பளவின் பயிர்களை பதிவு செய்துள்ளனர்.   2017 ஆம் ஆண்டின் நடவுப்பணிகளை அவர்கள் மேற்கொள்ளும் பொருட்டு ஏற்கனவே பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க மாநில அரசு அனைத்து பொறுப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறது.  பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உழவர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், வழிகாட்டிக் குறிப்புகளின்படி பயிர் அறுவடைப் பரிசோதனைகளினடிப்படையில், விளைச்சல் குறித்த தரவு பெறப்பட்ட 3 வார காலங்களுக்குள், 2016-17 ஆம் ஆண்டிற்கான காப்புறுதிக் கோரிக்கைகள், காப்புறுதி நிறுவனங்களால் தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.  தேவையான தகவல் அளிக்கப்பட்டுள்ளதால் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைவதற்கு முன்னர் தமிழ்நாட்டிலுள்ள உழவர்களுக்கு 2016-17 ஆம் ஆண்டிற்கான சம்பா பருவகாலத்திற்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

கட்சத்தீவை மீட்க வேண்டும்:-

தற்போது தமிழ்நாட்டில் பாக் நீரிணைப்பு நெடுகிலும் உள்ள மீனவர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். கடலை நம்பி வாழ்கிற இவர்களுடைய வாழ்வாதாரம் இலங்கை கடற்படையினரின் தீவிரமான நடவடிக்கைகளினால் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது.  பாக் நீரிணைப்பிலுள்ள இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள்  பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன். கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளை நீண்டகாலமாக விடுவிக்காமலிருப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்து, அவர்களுடைய மிகவும் முக்கியமான உடைமையை மீட்க இயலாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 133 படகுகளை சீரமைக்கப்பட்ட நிலையில் உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசிடம் நான் ஆணித்தரமாக வலியுறுத்துகிறேன்.  இந்த நீண்டகால பிரச்சினைக்குரிய நிரந்தரத் தீர்வு கட்சத்தீவை  மீட்பது தான். 

நீட் தேர்வு மூலம் குந்தகம்:-

கல்வியைப் பொறுத்தமட்டில், தற்போதுள்ள அனைவரையும் உள்ளடக்கிய, சமஉரிமைகளை உறுதி செய்யும் எல்லோருக்கும் கல்வி உலகமயமாக்கல் மற்றும் மாநில மொழி மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் கொள்கைகளைக் கொண்டுள்ள தற்போதைய கல்விக் கொள்கையை  பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக நம்புகிறது. இச் சூழலில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மாநிலத்தின் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. தமிழகத்தில் நன்கு செயல்பட்டு வரும், தமிழ்நாடு அரசின் வெளிப்படையான மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை முறையின் மூலமாக பயனடைந்து வரும் தமிழ்நாடு மாணவர்களுக்கு, மாபெரும் அநீதி இழைப்பதாகவும் இது அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைமுறையை முறைப்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கவனமான பரிசீலனைக்குப் பின்னர் மாநிலத்திலுள்ள இளநிலை (தொழிற்கல்வி) பிரிவுகளில் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை சட்டத்தின் வாயிலாக நுழைவுத் தேர்வுகளை ரத்துசெய்தது. இது அரசமைப்பு சட்டத்தின் 254(2) ஆம் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. உச்சநீதி மன்றம் வரையிலான சட்டப்பூர்வ சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகண்டுள்ளது.  தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை முறையானது குறிப்பாக, நலிவுற்ற பிரிவுகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் நலனை பாதுகாக்கிறது.  ஏனெனில், அத்தகைய மாணவர்களால் பொது நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்பகுதி உயர்பிரிவு மாணவர்களுடன் போட்டியிட இயலாது.  பொது நுழைவுத் தேர்வை தடைசெய்யும் தமிழ்நாடு அரசின் முடிவினால் பெருவாரியான எண்ணிக்கையில், சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய, தகுதிவாய்ந்த கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றிருக்கின்றனர். பட்டமேற்படிப்பு சேர்க்கையைப் பொறுத்தவரையில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றி வருபவர்களுக்கு, தமிழ்நாடு அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது மேலும், மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்றியவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது.  “நீட்” தேர்வினை அறிமுகம் செய்வது இத்தகைய கொள்கை முயற்சிகள் செயல்படுத்தப்படுவதை பயனில்லாமல் செய்வதுடன், மேற்கொண்டு மாநிலத்தின் சமூக-பொருளாதார நோக்கங்களை வீணாக்கிவிடும்.  அரசு மருத்துவ மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகள் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புக்கான நடைமுறையிலுள்ள சேர்க்கை கொள்கையை பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு சட்டமன்றம் இரு சட்டமுன்வடிவுகளை அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றியது.  இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 254(2)ஆம் ஷரத்தின் கீழ், இந்தியக் குடியரசுத் தலைவரின் அனுமதி வேண்டப்பட்டுள்ளது. மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், பல்மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், தற்போது நடைமுறையில் உள்ள நியாயமான மற்றும் வெளிப்படையான சேர்க்கை முறையை தொடர்வதற்கு ஏதுவாக இந்த இரு சட்ட முன்வடிவுகளுக்கு உடனடியாக ஏற்பளிக்குமாறு நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.  மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் நிலவும் சூழலை கருத்திற்கொள்ளாமல், பொறியியல் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் உள்ளிட்ட ஏனைய தொழிற்படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வினையும் கட்டாயமாக்க வேண்டாமென்றும் இந்திய அரசினை நான் வலியுறுத்துகிறேன்.

திறன் வளர்ப்புக்கு நிதி உதவி:-

நமது மனித வளத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும், கிராமங்களிலிருந்து வேலை வாய்ப்பைத் தேடி  இடம்பெயர்கின்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரவேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது. திறன் மேம்பாட்டுத் துணைக் குழுவின் உறுப்பினர்களுள் தமிழக முதலமைச்சரும் ஒருவர். தமிழ்நாடு தெரிவித்த ஏராளமான முக்கிய கருத்துக்கள் துணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. திறன் மேம்பாட்டு திட்டங்களை  மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நேரடியாக செயல்படுத்துவதால், ஒவ்வொரு அரசின் பங்கினை  தெளிவுபடுத்துவது இன்றியமையாதது என்ற கருத்தை தமிழ்நாடு அரசு குழுவின் முன் வைத்தது.   தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் போன்ற நிறுவனங்கள்  பயிற்சி அளிப்பவர்களை நேரடியாக பணியமர்த்தி நிதியுதவி அளிக்கின்றன.  மாநில அமைப்புகளும் இதே பணியை செயல்படுத்துகின்றன.  இரண்டு அரசுகளின் இவ்வகையான செயல்பாட்டினால், இரட்டிப்பான முயற்சிகள், குறைவான மேற்பார்வை மற்றும் அதிக முதலீட்டு செலவுகள் ஆகியவற்றினை எதிர்கொள்ள நேரிடுகிறது.  தேசிய திறன் மேம்பாட்டுக்கழகம் போன்ற மத்திய அரசின் அமைப்புகள்,  தேசிய அளவிலான நிலைப்படுத்தல், அங்கீகாரம்,  சான்றளிப்பு செயல்பாடுகள், நிதியளித்தல், கொள்கை மற்றும் கட்டமைப்புப் பணிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு கருதுகிறது.  திறன் மேம்பாட்டை நாடும் இளைஞர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்க மாநில அரசின் அமைப்புகள் மட்டுமே சிறந்த நிலையில் இருப்பதால் பயிற்சி அளிக்கும் பணி, அந்நிறுவனங்களுக்கே வழங்கப்பட வேண்டும். பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் திட்டத்தின் கீழ், ஒட்டு மொத்த  பயிற்சியையும் மாநில அரசு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட வழிவகை செய்யப்பட வேண்டும்.  அதே போன்று, திட்டத்தின் கீழ், பயிற்றுநர்கள் மேம்பாடு உட்பட திறன் வளர்ப்பு கட்டமைப்பினை வலுப்படுத்த தேவையான நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.

நிதி ஆணையத்தால் தமிழகம் பாதிப்பு:-

மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்கள், முதலமைச்சரின் துணைக் குழுவின் அறிக்கை அடிப்படையாக கொண்டு சீரமைக்கப்பட்டன. இந்த சீரமைப்பு முறையானது, அதிகளவு தாராள நிதி விகிதாச்சாரம், ஆறு முக்கிய திட்டங்களுக்கான நடைமுறையிலுள்ள  நிதி பங்கீட்டு நடைமுறையை தொடர்தல் உட்பட பல நேர்மறை அம்சங்களை கொண்டுள்ளது.  மத்திய அரசின் பங்கு, 50 சதவீதத்திற்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்கிறது.  எனினும், பல பிரச்சனைகள் தொடர்கின்றன. அனைத்து முக்கிய திட்டங்களுக்கான மாநில நிதிகளின் பங்குத் தொகை 40 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டது ஒரு முக்கிய பிரச்சனையாகும். 14-வது நிதி ஆணையம், மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கை 42 சதவீதமாக உயர்த்தி வழங்கி உள்ளது இதற்கு முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.  14 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளால்  மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.  ஏனெனில், மாநிலங்களுக்கிடையேயான பங்கீட்டில், தமிழகத்தின் பங்கு  ஏறத்தாழ 20 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.  அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய வரிவசூல் கூட்டப்பட்டபோதும், தமிழ்நாட்டிற்கு எவ்வித பயனும் இல்லை.  பல்வேறு மத்திய வரிகள் மீது வரிமீதுவரி மற்றும் மேல்வரிகள் விதிக்கின்ற போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.  எனவே, மத்திய அரசால் நிதி வழங்கப்படும் திட்டங்களுக்கு மாநில அரசின் கூடுதல் பங்கான 40 சதவீதம் வழங்குவது, தமிழ்நாட்டிற்கு ஒரு சவாலாக உள்ளது. சில முக்கிய திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் குறைவாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, மாநிலங்களின் இடர்களை அதிகப்படுத்தி உள்ளது. குறிப்பாக, அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய இடைநிலை கல்வி இயக்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை திட்டம் போன்ற திட்டங்களின்பால் உங்கள்  கவனத்தை நான் ஈர்க்க விழைகிறேன்.

ரூ. 2551 கோடி உதவித்தொகை:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை குறித்த தேர்வில் , 2015-16 ஆம் ஆண்டு வரை இந்திய அரசால், வழங்கப்பட்ட நிதிகளுக்கான பயன்பாட்டு சான்றிதழ்களை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.  2015-16 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.669.47 கோடியையும், 2016-17 ஆம் ஆண்டிற்கான கேட்புத் தொகை ரூ.1882.04 கோடியையும் வேண்டி கோரிக்கை அளிக்கப்பட்டும், இத்தொகை  சமூக நீதி மற்றும்  மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் இதுவரை வழங்கப்படவில்லை தமிழ்நாட்டின் கோரிக்கைகளை அமைச்சகம் ஏற்றுக் கொண்ட நிலையில், வரவு-செலவுத் திட்டத்தில் போதுமான ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் நிதி வழங்கப்படவில்லை. இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்காக வரவு-செலவுத் திட்டத்தில் போதுமான ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், மேலும் எவ்வித காலதாமதமுமின்றி மாநிலங்களுக்கு நிதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.  மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை திட்டத்திற்காக மத்திய அரசின் முழு அளவிலான தற்போதைய ஆதரவு 31.3.2017 அன்றுடன் முடிவடையும் 12வது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்கு பின்னரும் பேணுவது உறுதி செய்யப்பட வேண்டும். 

சரக்கு மற்றும் சேவை வரி:-

இந்திய பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மத்திய சரக்குகள் மற்றும் சேவைவரி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுச் சட்டங்களின் மூலமாக மறைமுக வரிகளில் வரலாற்றுப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்ட வரைவு, விரைவில் மாநில சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்பட உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின் அறிமுகம்,  தமிழ்நாடு போன்ற நிகர ஏற்றுமதி மற்றும் உற்பத்தி மிகு மாநிலத்திற்கு, நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படுத்தும் எனவும் மாநிலத்தின் நிதி நிலையை வெகுவாக பாதிக்கும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அரசியலமைப்பின் 101 ஆவது திருத்தத்திற்குப் பின்னர் மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன  என்பதை உறுதிசெய்ய  சரக்கு மற்றும் சேவை வரி குழுவினோடு தமிழ்நாடு தொடர்ந்து முனைப்பாக பங்கேற்று வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரியின் குழுவிற்கான கூட்டங்களில் தமிழ்நாட்டின்  முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. எஞ்சியுள்ள விவகாரங்களும் இதே போன்று விட்டுக்கொடுத்து செயல்படுத்தப்படுவதை நான் வலியுறுத்துகிறேன்.

முதியோர் ஓய்வூதியம்,

முதியோர் ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, மகப்பேறு பலன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் கீழ் ஊதியம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகை வழங்குதல் உள்ளிட்டவற்றை வங்கி கணக்குகளுக்கு மாற்றி, ரொக்கமாக வழங்குவதற்கு பதிலாக நேரடி பலனை பெறும் வகையில்  பணப்பரிமாற்றத்தை தொடக்க  காலத்திலேயே பின்பற்றிய  மாநிலம் தமிழ்நாடு ஆகும். இருப்பினும், பயனாளிகளுக்கான பணம் வழங்குதல் வங்கி பரிமாற்றங்களுக்கு பிறகு போதுமான வங்கியாளர்களின் வங்கி கட்டமைப்பு இல்லாததினால், ஊரக பகுதிகளின் வங்கி கணக்கில் பொதுமக்கள் தங்களுடைய பணத்தினை எடுப்பதில் இடர்பாட்டினை எதிர்கொள்கின்றனர். மேலும், உணவு, உரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கான மானியத்தினை ரொக்கமாக வழங்குவதை நாங்கள் விரும்பவில்லை. இத்தகைய நேர்வுகளில்,  பலன்களின் அளவை காட்டிலும் நேரடியாக பொருட்கள் கிடைப்பது ஒரு சவாலாகும். இந்திய அரசின் ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளையும் சேர்க்கும் பொருட்டு, தமிழக அரசு  இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வளைதள அமைப்பை தொடங்குவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்கள்

எண் மய முறையில் பணம் செலுத்துவது தொடர்பாக, மாநிலத்தில் சுமார்  10,000 இ-சேவை மையங்களில்  இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயனீட்டாளர்கள் விவரங்களுடன் ஆதார் அட்டையை இணைப்பதனால் இ-சேவை முறையை நன்றாக செயல்படுத்த உதவுகிறது.  இ-சேவை மையங்களில், இணையம் வாயிலாக 140க்கும் மேற்பட்ட சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.  மேலும் 2 மாதங்களுக்குள், கூடுதலாக 300 சேவைகள் வழங்க வகை செய்யப்படும்.  கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு இ-சேவை மையங்கள் மூலம் இணையம் வாயிலாக 3 கோடிக்கும் மேலான பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலங்களுக்கு அதிக பங்களிப்பு

தமிழ் நாட்டில், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையின் கீழ், நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் நிதி தன்னாட்சி ஆகியவற்றில் மாநிலங்களுக்கு அதிக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். வலிமையான மாநிலங்கள் மூலம் தான் வலிமையான நாடு உருவாகும் என்பதே எங்களது ஆழ்ந்த நம்பிக்கையாகும்.  ஆதலால், இந்தியாவின் ஆளுகை அமைப்பு முறை இன்னும் பற்பல கூட்டாட்சி சிறப்புகளை வெளிப்படுத்த வேண்டும். 

இந்த பெருமை வாய்ந்த குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் கருத்துக்களை நான் முன்வைத்துள்ளேன்.  எங்கள் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளித்து, நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளில், மாநிலங்களும் தங்களது முழு பங்களிப்பை நல்க வழிவகை செய்து, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து, நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இந்த முயற்சி உதவும் என நான் நம்புகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்