முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசார் உடல் திறனை பரிசோதிக்க நூதன போட்டி

திங்கட்கிழமை, 29 மே 2017      சென்னை

மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் போலீசார் உடல் திறனை பரிசோதிக்க நூதன போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் 2 பெண் போலீசார் உள்பட 15 பேர் போட்டியில் வென்று அசத்தினார்கள்.

ரூ.15 ஆயிரம்

ஒற்றைக் காலில் நின்றபடி இன்னொரு கால் ஷூவை கழட்டி மாட்டி கட்டணுமா...? "ஆளவுடுங்க சாமி! என்று காக்கி சட்டைகள் ஒவ்வொன்றும் தயங்கி கொண்டிருந்தன. ஏம்பா... இது கூடவா உங்களால் முடியாது...? ஆயிரம் ரூபா பரிசு தாறோம்... என்று உயர் அதிகாரிகள் சொல்லி அவர்களை போட்டிக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள். மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில்தான் இந்த நூதன போட்டி அரங்கேறியது. வழக்கமாக அந்த மைதானத்தில் தான் போலீசார் கவாத்தில் (பயிற்சி) ஈடுபடுவார்கள். அப்படித்தான் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் இப்படி திடுதிப்பென்று உயர் அதிகாரிகள் வருவார்கள். இப்படி ஒரு போட்டிக்கு அழைத்து திக்குமுக்காட வைப்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போலீசாரின் கவாத்தை பார்வையிட வந்தனர். அப்போதுதான் அவர்களின் உடல் தகுதியை சோதிக்க ஒரு போட்டியை வைக்க முடிவு செய்தார்கள். ஒற்றைக் காலில் நின்று கொண்டு இன்னொரு கால் ஷூவை கழட்டி மாட்டி கட்ட வேண்டும்!

உங்களில் எத்தனை பேருக்கு முடியும்? செய்து காட்டுங்கள் பார்ப்போம். வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தருகிறோம் என்றனர். அதிகாரிகள் சொன்னதை கேட்டதும் போலீசார் ஒருவருக் கொருவர் பார்த்து கொண்டனர். அதெப்படிப்பா முடியும்? போட்டியில் கலந்துகிட்டு அசிங்கப்பட்டு விடக் கூடாது என்று 90 சதவீத போலீசாரும் தயங்கினார்கள். என்ன... யாராலும் முடியாதா....? என்று அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கேட்டனர். 17 பேர் போட்டிக்கு தயார் என்று முன் வந்தார்கள். சரி, ஆரம்பியுங்கள் என்று போட்டியை தொடங்கி வைத்தபடி அதிகாரிகள் பார்த்து கொண்டிருந்தார்கள். 2 பெண் போலீசார் உள்பட 15 பேர் போட்டியில் வென்று அசத்தினார்கள். அவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.15 ஆயிரத்தை அதிகாரிகள் வழங்கினார்கள். இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, "போலீசாருக்கு உடல் தகுதிதான் முக்கியம். தொப்பை இல்லாமல், பேலன்ஸ் பண்ணும் திறன் இருந்தால் மட்டுமே ஒற்றை காலில் நிற்க முடியும்.

அவர்களின் உடல் திறனை பரிசோதிப்பதற்காகவே இந்த போட்டியை வைத்தோம் என்றனர். போலீஸ் பணியில் இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி கட்டாயம் செய்வார்கள். ஆனால் வேலைப்பளு காரணமாக உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படு வதையும், சிலருக்கு உடல் வாகுப்படியே தொப்பை ஏற்பட்டு விடுவதாகவும் போட்டியில் கலந்து கொள்ளாத போலீசார் ஆதங்கப்பட்டனர். அவர்களிடம், உங்கள் பிரச்சினைகள் புரிகிறது. அதற்காக உடல் பயிற்சியை விட்டு விடாதீர்கள். பணியில் இருக்கும் இடத்திலேயே நடந்து செல்வது, புகார்களை விசாரிக்க செல்லும் போது நடந்து செல்வது என்று ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள். இது மைலாப்பூரில் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழகத்திலும் இதே நிலைமைதான் இருக்கும். இவர்களின் ஆலோசனையை எல்லா போலீசாரும் ஏற்றுக் கொண்டால் நல்லது. ஒற்றை காலில் நின்று ஷூவை மாட்ட முடியுமா?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து