முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய துணை-ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்றார் - ஜனாதிபதி ராம்நாத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கைய நாயுடு நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

5-ம் தேதி தேர்தல்

துணை ஜனாதிபதியாக கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வியாழக்கிழமையுடன் முடிந்தது. இதையொட்டி புதிய துணை-ஜனாதிபதியை தேர்வு செய்ய கடந்த 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த வெங்கைய்யா நாயுடு நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி களம் இறங்கினார்.

வெங்கையா வெற்றி

பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்களும் வாக்களித்தனர். அந்த தேர்தலில் வெங்கைய்யா நாயுடு தன்னை எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியை விட கூடுதலாக 244 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இதையடுத்து துணை ஜனாதிபதியாக வெங்கைய்யா நாயுடு பதவி ஏற்கும் விழா நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்தது.

சிலைகளுக்கு மரியாதை..

முன்னதாக காலை வெங்கைய்யா நாயுடு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார். பிறகு ஜனாதிபதி மாளிகைக்கு அவர் வந்தார். காலை 10 மணிக்கு அங்கு நடந்த எளிய விழாவில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலைவர்கள் பங்கேற்பு

விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும் அவர்கள் வெங்கைய்யா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நேர்மையான முறையில் ...

பதவி ஏற்றுக்கொண்டதும் வெங்கைய்யா நாயுடு உரையாற்றினார். அவர் கூறுகையில், பாராளுமன்ற மாநிலங்களவையை பயமின்றியும் பாரபட்சமின்றியும் நேர்மையான முறையில் நடத்தப் போவதாக கூறினார். மாநிலங்களவை மாண்பை காக்க தனக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பணிகளை தொடங்கினார்

மாநில முதல்வர்கள் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட வெங்கைய்யா நாயுடு பிறகு தனது அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார். நேற்று பிற்பகல் அவர் பாராளுமன்ற மேல்சபை தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி அவருக்கு மாநிலங்களவையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

முன்னதாக, மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேசிய அவர், நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஒரு விவசாயியின் மகன். நீண்ட அரசியல் பயணத்துக்குப் பின் இந்த நிலையை அடைந்துள்ளேன். எனது பின்னணியை கருதியும் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்தும் எனது பணியை சிறப்பாக செய்வேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கவுரவம் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எனக்கு ஆதரவு அளித்த அத்தனை பேருக்கும் கடமைப்பட்டுள்ளேன் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து