பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் உடைகிறது: ராஜ்யசபை தலைவர் பதவியிலிருந்து முக்கிய தலைவர் சரத்யாதவ் நீக்கம்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      இந்தியா
Sharad Yadav 2017 8 12

புதுடெல்லி : ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து கட்சியின் முக்கிய தலைவரான சரத்யாதவ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் உடைவது உறுதியாகியுள்ளது.

கருத்து வேறுபாடு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதீஷ்குமாருக்கும் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் திடீரென்று நிதீஷ்குமார் முடிவின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளித்தது. அதேசமயத்தில் துணைஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு நிதீஷ்குமார் ஆதரவு கொடுத்தார்.


பா.ஜ.க ஆதரவுடன்...

இந்தநிலையில் வருமான வரித்துறையினரின் சோதனையையடுத்து பீகார் மாநிலத்தில் துணைமுதல்வராக இருந்த ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவர் லல்லு பிரசாத் மகன் பதவி விலக வேண்டும் என்று நிதீஷ்குமார் உத்தரவிட்டார். இதற்கு லல்லு மறுத்துவிட்டார். அதோடு மட்டுமல்லாது நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்ததை லல்லு வாபஸ் பெற்றார். நிதீஷ்குமார் அரசு பெரும்பான்மையை இழந்தது.  முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பாரதிய ஜனதா ஆதரவுடன் நிதீஷ்குமார் மீண்டும் முதல்வரானார். பாரதிய ஜனதா ஆதரவை பெற்றதற்காக ஐக்கிய ஜனதாதளத்தின் மற்றொரு முக்கிய தலைவரான சரத்யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நிதீஷ்குமாருக்கும் சரத்யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாகவே வெடித்தது. சரத்யாதவ் புதிய கட்சி தொடங்கபோகிறார் என்றும் கூறப்பட்டது.

சரத்யாதவ் நீக்கம்

இந்தநிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ராஜ்யசபையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு டெல்லியில் கூடி கட்சியின் ராஜ்யசபை உறுப்பினரான அலி அன்வர் அன்சாரியை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று ஐக்கிய ஜனதாதளத்தின் ராஜ்யசபை எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவை நீக்கினர். அவருக்கு பதிலாக கட்சியின் மற்றொரு தலைவரான ஆர்.சி.பி. சிங்கை தலைவராக நியமித்தனர். பின்னர் அந்த எம்.பி.க்கள் சேர்ந்து துணைஜனாதிபதியும் ராஜ்யசபை தலைவருமான வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, தலைவர் பதவியில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதை கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.சி.பி சிங், முதல்வர் நிதீஷ்குமாருக்கு நம்பிக்கைக்குரியவர்.

சுற்றுப்பயணம்

ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சரத்யாதவ் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். ராஜ்யசபை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பற்றி சரத்யாதவ் கூறுகையில், தாம் இன்னும் மிகப்பெரிய கூட்டணியான ராஷ்ட்ரீய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணியில்தான் இருப்பதாக உணருகிறேன் என்றார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது நிதீஷ்குமார் கட்சி மட்டுமல்ல எனது கட்சியும்தான். உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்னுடன்தான் இருக்கிறது. நீதிஷ்குமாரிடம் அரசு மட்டும்தான் இருக்கிறது என்று சரத்யாதவ் மேலும் கூறினார்.

இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் நிதீஷ்குமார் இணைய வேண்டும் என்று பாரதிய ஜனதாதளம் தலைவர் அமீத்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து