அலையில் சிக்கி உயிரிழந்த மீனவர் உள்ளிட்ட 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      தமிழகம்
CM Edapadi1 2017 9 3

சென்னை : கடல் அலையில் சிக்கி உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர் உள்ளிட்ட 7 பேர் குடும்பங்களுக்கு தலா  ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் இளங்கோ, கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் கோவிலூர் கிராமம், ஒரத்தநாடு-வெட்டிக்காடு தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில், வேலு என்பவரின் மகன் பாண்டியன் ஜூலை 10-ம் தேதி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் சபரி, தனியார் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, தேங்கியிருந்த மழை தண்ணீர் குழியில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் கலையம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகு என்பவரின் மகள் சரஸ்வதி எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், ஏ மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் மாரியப்பன் மற்றும் முருகன் என்பவரின் மனைவி முனியம்மாள் ஆகிய இருவரும் பட்டாசு வெடித்து, தூண் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், கடியப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த மிக்கேல் என்பவரின் மகன் மரிய எப்ரேன், பைபர் படகில் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவித்துளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து