முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம், செங்கோட்டை, அனைத்தையும் இடியுங்கள் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம்கான் ஆவேசம்

வியாழக்கிழமை, 19 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ: ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம், செங்கோட்டை, குதுப்மினார் என நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தவர்கள் கட்டிய அனைத்தையும் இடியுங்கள் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஆசம்கான் ஆவேசமாகக் கூறியுள்ளார். தாஜ்மஹால் மீது பாஜகவின் உ.பி. எம்எல்ஏவான சங்கீத் சோமின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் முசாபர்நகர் மதக்கலவர வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தவர் சங்கீத் சோம்.பாஜக எம்எல்ஏவான இவர் மதக்கலவரத்தை தூண்டுவது போல் அடிக்கடி பேசி வருபவர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இவர் தாஜ்மஹாலின் வரலாறு கொண்டாடப்பட வேண்டியதல்ல என்று கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்தது. அந்தச் சர்ச்சை அடங்குவதற்குள்ளாகவே முதல்வர் யோகி ஆதித்யநாத், பாரதத்தாயின் புதல்வர்களிள் ரத்தம் மற்றும் வியர்வையில் எழுப்பப்பட்டது தாஜ்மஹால் எனக் கூறினார். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவரான ஆசம்கான் கூறிய கருத்து மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சமாஜ்வாடியின் பொதுச்செயலாளரும் ராம்பூரின் எம்எல்ஏவுமான ஆசம்கான் கூறியதாவது:
தாஜ்மஹால் மட்டும் அல்ல ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றக் கட்டிடம், செங்கோட்டை, குதுப்மினார் ஆகியவையும் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தவர்களாக கூறப்படுபவர்கள் விட்டுச் சென்ற சின்னங்களே. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தினர் (ஆர்எஸ்எஸ்), இவற்றை துரோகிகளின் சின்னங்கள் எனக் கூறுகிறார்கள். இது உண்மை எனில் அவை அனைத்துடன் சேர்த்து தாஜ்மஹாலும் இடிக்கப்பட வேண்டும். இந்தக் கருத்தை நான் இதற்கு முன்பும் கூறியுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'சிவன் கோயில் இடித்து தாஜ்மகால்'
இதற்கிடையே, பாஜகவின் மற்றொரு உ.பி. தலைவரான வினய் கட்டியார், "இந்து அரசர் கட்டிய சிவன் கோயில் இருந்த இடத்தில், தன் மனைவி மும்தாஜின் உடலை ஷாஜஹான் புதைத்து அங்கு தாஜ்மஹால் கட்டினார். அங்கு பிரபலமாக இருந்த சிவன் கோயில் ஷாஜஹானால் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு இருந்த ஆட்சி அதிகாரத்தால் நம் சிவன் கோயில் இருந்த இடத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்டது. இன்று தேசிய வரலாற்று சின்னங்களில் ஒன்றாக இருப்பதை பாதுகாக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான கட்டியாரும் சர்ச்சைக்கு உரிய கருத்துக்களைக் கூறும் வழக்கம் உடையவர். இதுபோல், தொடர்ந்து தாஜ்மகால் மீது கூறப்படும் சர்ச்சைக்கு உரிய கருத்துக்களால் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் மேலும் தொடர்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து