முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திப்புசுல்தான் ஜெயந்தி கொண்டாட மத்திய அமைச்சர் எதிர்ப்பு: சித்தராமையா கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : இந்துக்களுக்கு எதிராக போரிட்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை (திப்பு ஜெயந்தி) கர்நாடக அரசு சார்பில் கொண்டாட மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மைசூருவை ஆண்ட மன்னனும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவருமான திப்பு சுல்தானின் பிறந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக அரசு இந்நாளை ‘திப்பு ஜெயந்தி’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஹெச்பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு திப்புசுல்தான் ஜெயந்தியை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாநில சிறுபான்மையினர் நலத்துறை அழைப்பிதழ் அனுப்பி வருகிறது. அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பாஜக மூத்த தலைவர்களுக்கும் எம்பி, எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “இஸ்லாமியரான திப்பு சுல்தான் ஆயிரக்கணக்கான இந்துக்களை கொன்றுள்ளார். மத வெறியரான அவர் ஏராளமான இந்து கோயில்களை மட்டுமல்லாமல் கிறிஸ்தவ ஆலயங்களையும் அழித்துள்ளார். எனவே அவரது பெயரில் அரசு விழா எடுத்து, கொண்டாடக் கூடாது. மங்களூருவில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு எனக்கு அழைப்பிதழ் அனுப்ப கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல அனந்த் குமார் ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் திப்பு சுல்தான் குறித்து மிகவும் அவதூறான வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோரும் திப்பு ஜெயந்தியை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா கூறும்போது, “திப்பு சுல்தானின் வரலாறை அறியாமல் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இந்திய சுதந்திரத்துக்கு மட்டுமல்லாமல் கன்னட மொழியின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டதால் மைசூரு புலி என வரலாற்று ஆசிரியர்களால் திப்பு சுல்தான் கொண்டாடப்படுகிறார்.

மக்கள் பிரதிநிதி என்பதால் அரசு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பது வழக்கமான ஒன்றுதான். அதற்காக பாஜகவை சேர்ந்தவர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் பேசக்கூடாது. கர்நாடகாவில் மத பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது. மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்களே பொறுப்பில்லாமல் பேசக் கூடாது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து