பதநீர் சீசன் முடிந்ததால் நெல்லை மாவட்டத்தில் கருப்பட்டியில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பதநீர் உற்பத்தி தற்போது படிப்படியாக குறைந்தது. இதனால், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்டு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் கருப்படிகளே விற்பனைக்கு வருவதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 10 கிலோ கொண்ட ஒரு சிப்பம் கருப்பட்டி ரூ.2,700-க்கு விற்பனையானது. ஆனால், கடந்த சில நாள்களாக உடன்குடி கருப்பட்டியின் விலை சிப்பம் ரூ.3,100-க்கு விற்பனையாகிறது. இதேபோல் வேம்பார் ரகங்கள் சிப்பம் ரூ.2,700-க்கு விற்பனையாகி வருகிறது. வெல்லம், மண்டவெல்லம் ஆகியவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை.இதுகுறித்து நெல்லை டவுனை சேர்ந்த கருப்பட்டி வியாபாரி ஒருவர் கூறியதாவது- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி, வேம்பார், திருச்செந்தூர், பரமக்குறிச்சி, காயாமொழி, வட்டவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கருப்பட்டி அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக போதிய மழையின்மையால் பதநீர் உற்பத்தி பாதியாக குறைந்ததோடு, பல இடங்களில் பனைமரங்களும் பட்டுப்போய்விட்டன. கருப்புக்கட்டி குறைந்த அளவிலேயே கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விலை உயர்வு
தற்போது மக்களிடையே கருப்பட்டி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அவற்றின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நெல்லையிலிருந்து மும்பை, கொல்கத்தா, தில்லி போன்ற நகரங்களுக்கும் கருப்பட்டி ஏற்றுமதியாகி வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இப்போது கடுமையாக விலை உயர்ந்துள்ளது. பழனி, உடுமலைப்பேட்டை பகுதிகளிலிருந்து அச்சுவெல்லமும், சேலம், ஈரோடு மாவட்டங்களிலிருந்து வெல்லமும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. அவற்றின் வரத்து போதிய அளவில் உள்ளது. முதல்தர மண்டவெல்லம் கிலோ ரூ.46-க்கும், இரண்டாம் தர வெல்லம் கிலோ ரூ.45-க்கும் விற்பனையாகி வருகிறது என்றார் அவர்.