திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 நாள் திட்ட பணிகள்: மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 100 நாள் வேலை திட்ட பணிகளை மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ஏரி தூர்வாருதல், குளம் வெட்டுதல், மரக்கன்றுகள் நடுதல், பண்ணை குட்டைகள் வெட்டுதல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

100 நாள் வேலை திட்ட பணி

இந்நிலையில் 100 நாள் வேலை திட்ட பணிகளை டெல்லியிலிருந்து வருகை தந்துள்ள மத்திய அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் வைபவ மகேஸ்வர், யாதுல் கார்க் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலையிலுள்ள வீரப்பனூர், கோவிலூர் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்தனர். பின்னர் கலபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்ட கடலாடி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தனர். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், மண்புழு உரம் தயாரித்தல், பண்ணை குட்டைகள் வெட்டுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் முத்து மீனாள், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உஷாராணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஏ.எஸ்.குமார், நாகேஷ்குமார், சஞ்சீவி குமார், சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர்கள் அண்ணாதுரை, ஜெயந்தி, வினோத்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து