ராகுல் தலைவரானதால் காங்கிரஸ் பலவீனம் அடையும்: தமிழிசை

சென்னை, காங்கிரசுக்கு இருக்கும் கொஞ்ச பலமும் ராகுல்காந்தி தலைவரானதால் பலவீனமாகிவிடும் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தேசிய தலைவராக இப்போது ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆதிக்கமே தொடர்கிறது. ராகுல் ஏற்கனவே காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்தவர்தான். பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவரது தொகுதியில் ஒரு பஞ்சாயத்து கூட காங்கிரசாரால் ஜெயிக்க முடியவில்லை. அப்படிப்பட்டவர் காங்கிரசுக்கு தலைவர் ஆகிறார். அவருக்கு பா.ஜனதா தொண்டர்கள் வாழ்த்து சொல்ல வேண்டும். ஏனென்றால் காங்கிரசுக்கு இருக்கும் கொஞ்ச பலமும் ராகுல்காந்தி தலைவரானதும் பலவீனமாகிவிடும். தமிழக கவர்னருக்கு கருப்பு கொடி காண்பிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தில் கவர்னருக்குள்ள ஆளுமைக்கு உட்பட்டுதான் அவர் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காண்பிப்பது போன்ற அநாகரீகமான அரசியல் தேவையற்றது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.