4 நாள் நல்லெண்ணப் பயணமாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் வியட்நாம் வருகை

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      உலகம்
WAR SHIP  VIYATNAM 2018 03 06

டானாங்: அமெரிக்காவுக்குச் சொந்தமான விமானம் தாங்கிக் கப்பல் 4 நாள் நல்லெண்ணைப் பயணமாக நேற்று வியட்நாம் வந்தடைந்தது.

வியத்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க கடற்படைக் கப்பல் வியட்நாம் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தென் சீனக் கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் வியட்நாமுக்கு வந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் கார்ல் வின்ஸன் நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக வியட்நாமின் டானாங் துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.

வியட்நாம் போரின்போது மிகப் பெரிய நிலப்பரப்பில் பயிர் நாசினி நச்சுப் பொருளை அமெரிக்கா தூவியதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கான நினைவு மையத்தை பார்வையிடுவது உள்ளிட்ட பல்வேறு நல்லிணக்க நிகழ்ச்சிகளில் கார்ல் வின்ஸன் கப்பல் குழுவினர் பங்கேற்கின்றனர்.

மிகவும் கசப்பான வியட்நாம் போர் முடிவடைந்த பிறகு, அமெரிக்க மற்றும் வியட்நாம் ராணுவங்களுக்கிடையிலான பழைய பகையை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், ராணவ ரீதியில் மிக நெருங்கிய நட்புறவை பேணி வருவதன் அடையாளமாக கார்ல் வின்ஸனின் வியட்நாம் வருகை கருதப்படுகிறது.

எனினும், தென் சீனக் கடலில் முழு உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்தப் பகுதியில் ராணுவ நிலைகளை நிறுவக் கூடிய அளவுக்கு செயற்கைத் தீவுகளை உருவாக்கி வருகிறது.

இதற்கு அமெரிக்காவும், தென் சீனக் கடலில் உரிமை கொண்டாடி வரும் வியட்நாம் உள்ளிட்ட பிற நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இயற்கை வளம் மிக்க தென் சீனக் கடலில் அமெரிக்கா உரிமை கொண்டாடா விட்டாலும், அந்தப் பகுதி வழியாக கடல் பயணம் மேற்கொள்வதற்கான சர்வதேச நாடுகளின் உரிமையை அந்த நாடு வலியுறுத்தி வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து