புது டெல்லி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் 2 நாட்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்கிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, நேற்று முதல் 2 நாட்கள் தார்வாட், கதக், பெலகாவி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டுகிறார். நேற்று சித்தரு பீடத்திற்கு சென்ற அவர் அதன் மடாதிபதியைச் சந்தித்து ஆசி பெற்றார். பிறகு கதக்கில் நடக்கும் கைபிடி அரிசி சேகரிப்பு முகாமின் நிறைவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு, ஹுப்பள்ளியில் மாலை 6 மணிக்கு நடக்கும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பாராளுமன்ற கூட்டத்தொடரை முடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹுப்பள்ளியில் பா.ஜ.க நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இன்று நந்தகட்டில் உள்ள சங்கொல்லி ராயண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, திறந்தவேனில் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர், பெலகாவியில் நடக்கும் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு டெல்லி திரும்புகிறார்.