முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக கடல் சீற்றம் 18 கிராமங்கள் பாதிப்பு: வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

குமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் நேற்று 3-வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை எழும்பியது. இதனால் 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் காரணமாக நவஜீவன்காலணி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். அதே போல, வள்ளவிளை கரையோர பகுதியில் சில வீடுகளில் கடல் நீர் வீட்டுக்குள்ளும் புகுந்து விட்டதால் மீனவ மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர். இதனால் அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற பகுதிகளில் கடல் அலை 10 அடி முதல் 15 அடி உயரத்திற்கு எழும்பியது. கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், அப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 படகுகளை கடல் அலை இழுத்து சென்று விட்டதால் அது மீனவர்களுக்கு கூடுதல் கவலையை அளித்துள்ளது. குமரியில் 3-வது நாளாகவும் கடல் சீற்றம் காணப்பட்டது. இதையடுத்து கடற்கரை கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் விடிய விடிய தவிப்புக்கு ஆளானார்கள். குமரி மாவட்டத்தில் சுனாமி தாக்கிய போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். சுனாமி தாக்குதலுக்கு பிறகு குமரி கடல் பகுதியில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடல் சீற்றம், ஊருக்குள் கடல் நீர் புகுதல் போன்றவை அடிக்கடி ஏற்படுவதால் நீரோடி முதல் கன்னியாகுமரி வரை கடலோர கிராம மக்கள் பீதியுடன் காணப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து