முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொல்லாட் முதல் டி20 சதம்: இரண்டு வருடத்துக்கு பிறகு செயின்ட் லூசியா அணி வெற்றி

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

கரீபியன் : கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் பொல்லார்ட் அபார சதமடித்தார். இதையடுத்து கடந்த 2 வருடத்துக்கு பிறகு அவரது செயின்ட் லூசியா அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் போல வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் டி20 (சிபிஎல்) தொடர் நடந்து வருகிறது. இதிலும் பல்வேறு நாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகிறார். இதில் இந்திய நேரப்படி, நேற்று காலை பொல்லார்ட் தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியும் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணியும் மோதின.

பந்துவீச்சு தேர்வு...

டாஸ் வென்ற பார்படாஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி செயின்ட் லூசியா அணி களமிறங்கியது. அந்த அணியின் பிளட்சரும் டேவிட் வார்னரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வார்னர் இரண்டே பந்துகளை சந்தித்து ஹோல்டர் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து கார்ன்வால் வந்தார். இருவரும் அதிரடியாக பேட்டை சுழற்றினர். கார்ன்வால் 11 பந்துகளில் 30 ரன்கள் வஹாப் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிம்மன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வஹாப் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.

முதல் சதம்...

பின்னர் வந்த கேப்டன் பொல்லார்டும் பிளட்சரும் வந்த பந்துகளை விளாசி தள்ளினர். பிளட்சர் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து வஹாப் பந்துவீச்சில் அவுட் ஆனார். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிய பொல்லார்ட் அபார சதமடித்தார். அவர் 54 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 104 ரன்கள் குவித்தார். இது டி20 போட்டியில் அவரது முதல் சதம் ஆகும். இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. கரீபியன் லீக் போட்டியில் இதுதான் அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும்.

58 ரன்கள்...

பின்னர் களமிறங்கிய பார்படாஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகப் பட்சமாக அந்த அணியின் டிவைன் ஸ்மித் 58 ரன்கள் எடுத்தார். இதையடுத்து செயின்ட் லூசியா அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடந்த லீக் போட்டியில்தான் கடைசியாக லூசியா அணி வெற்றி பெற்றது. அதற்கு பின் வெற்றிபெறாத அணியாகவே அது இருந்தது. இரண்டு வருடத்துக்குப் பின் அந்த அணி வெற்றி பெற்றதால் வீரர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து