முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அனைத்து தரப்பு மக்களும் மனமுவந்து உதவ வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கேரளா மக்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் மனம் உவந்து, தங்களால் இயன்ற அளவுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளுத்து வாங்கிய மழை...

கேரள மாநிலத்தில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அங்குள்ள 80க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பின. நிரம்பிய அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவும் மாநிலத்தின் 14 மாவட்டங்களையும் நிலைகுலைய செய்திருக்கிறது. கடந்த 8-ம் தேதி முதல் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 400-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் 43 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் பல மாவட்டங்களில் ஏராளமானோர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மழைக்கு வாய்ப்பில்லை...

கடும் மழையால் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் சூழ்ந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு அவர்களுக்கான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  இந்த தகவல் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.  இதனை அடுத்து அங்கு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

தமிழகம் சார்பில்...

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்கிடையே நிவாரண நிதி மேலும் ரூ.5 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வண்ணம் அத்தியாவசிய பொருட்களான பால், துணிகள் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

முதல்வர் ஆய்வு...

இதற்கிடையே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று முன்தினம் அமைச்சர்களுடன் நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ததுடன் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வேட்டி, சேலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் வழங்கினார். இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதி மக்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர், இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

நடவடிக்கை எடுக்கும்...

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்கின்ற சாலையில் 63 இடத்திலே சரிவு ஏற்பட்டு அதை சீர் செய்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. அந்த சேதங்களை எல்லாம் கணக்கிட்டு, அவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். கேரளாவிற்கு, முதற்கட்ட மாக, 10-ந்தேதி ரூபாய் 5 கோடி தமிழ்நாடு அரசின் சார்பாக வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள்...

மேலும், ரூபாய் 5 கோடி தமிழ்நாடு அரசின் சார்பாக கேரள அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் 500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 10,000 போர்வைகள், மருந்துகள், வேட்டிகள், லுங்கிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கேரள பகுதிக்கு நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டிருக்கின்றது. உள்ளாட்சித் துறை அமைச்சரால் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களும், அரசின் சார்பாக பெறப்பட்ட நிவாரணப் பொருட்களும் சுமார் 21 லாரிகளில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

வரலாறு காணாத நிகழ்வு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேரள பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு வரலாறு காணாத நிகழ்வு. நூறு வருடங்கள் காணாத ஒரு பேரழிவு கேரளாவில் ஏற்பட்டிருக்கின்றது. தென்மேற்குப் பருவமழை அதிக அளவில் பொழிந்த காரணத்தினால், கேரள பகுதிகளில் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கின்றது.

மனமுவந்து உதவ வேண்டும்

ஆகவே, அனைத்து தரப்பு மக்களும் மனமுவந்து தங்களால் இயன்ற அளவிற்கு நிவாரணம் அளித்தால் நன்றாக இருக்கும். அவர்கள் விருப்பப்படி எவ்வளவு நிவாரணம் அளிக்க முடியுமோ, அவரவர் சக்திக்கேற்றவாறு கேரள மக்களுக்கு நிவாரணம் அளிப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து